\
Seeman Slams Govt Over Job Offer to Stampede Victims' Families
சீமான்Pt web

கரூர் துயரம் | கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலையா? - சீமான் கடும் தாக்கு

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா?; வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா? என சீமான் விமர்சித்திருக்கிறார்.
Published on

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய் கலந்துகொண்ட தேர்தல் பரப்புரையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்திருந்தனர். இச்சம்பவம் தமிழம் முழுவதையும் பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது. தவெக தொடங்கப்பட்டு அந்த சமயத்தில், 2 ஆண்டுகள் கூட முடியாத நிலையில், தவெகவிற்கு மட்டுமின்றி, தமிழகத்தின் காலக்கோட்டில் ஒரு கருப்புப் பக்கமாக மாறியிருக்கிறது கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம்.

கரூர் கூட்ட நெரிசல்
கரூர் கூட்ட நெரிசல்x page

இந்தசம்பவம் நடந்து சில தினங்களுக்கு பிறகு காணொளி ஒன்றை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய். அதில், பதற்றமான சூழலைத் தவிர்க்கவே, தான் சென்னை திரும்பியதாகவும், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன் எனவும் உருக்கமான பேசியிருந்தார். இதற்கிடையில், தவெக தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, உயிழந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கு அழைத்து சந்தித்தார் விஜய். அப்போது, பாதிக்கப்பட்டவர்களில் கால்களில் விழுந்து அவர், மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியானது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் இடங்களுக்கு சென்று ஆறுதல் கூறாமல், தன்னுடைய இடத்திற்கு அழைத்து சந்தித்தை பல்வேறு கட்சியினரும் விமர்சித்திருந்தனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கும் சிபிஐ விசாரித்து வருகிறது. இத்தகைய சூழலில், தவெக தலைவர் விஜய் தற்போது தமிழகத்தின் முதல்வராக அமர்ந்திருக்கிறார். இந்தசூழலில்தான், நாளை மறுநாள் (ஜூலை 10) கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவுள்ளார். முன்னதாக, முதல்வரான பிறகு, கரூர் வருவேன் என அவர் கூறியிருந்த நிலையில், இந்தப் பயணம் நடைபெறவிருக்கிறது. அதேசமயம், 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை கொடுக்க அரசு பரிசீலித்து வருவதாகவும், அவரின் கரூர் பயணத்தின் போது இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்X

எனினும், அரசு வேலைக்காக இளைஞர்கள் மாணவர்கள் கடுமையாக படித்து வரும் நிலையில், அவர்களுக்கு அரசுவேலை கொடுப்பது எந்த வகையில் நியாயம் என பல்வேறு தரப்பில் இருந்தும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், சமீபத்தில் கரூர் தொகுதி எம்.எல்.ஏ எம்.ஆர். பாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கும் நிலையில், அத்தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை கணக்கில் கொண்டே, கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்கும் திட்டமிடல்களை தவெக அரசு தொடங்கியிருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

அந்தவகையில் தான், இந்த விவகாரம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா? வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா?. தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், 50 நாட்கள்வரை கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர் விஜய் அவர்கள், அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவி விலகி, தவெகவில் சேர்ந்ததையடுத்து, உடனடியாக கரூருக்குச் செல்ல முற்படுவதும், மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கத் திட்டமிடுவதும் மலினமான வாக்கரசியலாகும். கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 35 இலட்சம்வரை துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அரசு வேலை என அறிவிப்பது இடைத்தேர்தலுக்காகச் செய்யப்படும் அற்பத்தனமாகும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், ”அரசு வேலைக்காக இரவு பகலாகப் படித்துவிட்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். தகுதித் தேர்வு எழுதிவிட்டு இன்றளவும் பணி ஆணை கிடைக்காமல் ஆசிரியர் பெருமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல ஆண்டுகள் பணி செய்துவிட்டு முறையான ஓய்வூதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பல்லாயிரம் செவிலியர்களும், ஆசிரியர்களும், கௌரவ விரிவுரையாளர்களும், டாஸ்மாக் ஊழியர்களும், மின்துறை மற்றும் போக்குவரத்துப் பணியாளர்களும், தூய்மைப்பணியாளர்களும் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தவெக அரசு, இடைத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு கரூரில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவது மிகத் தவறானப் போக்காகும்” எனவும் தெரிவித்திருக்கிறார்.

Seeman Slams Govt Over Job Offer to Stampede Victims' Families
திமுக, தவெக இணைந்து செயல்பட வேண்டும் - வைகோவுக்கு பதில்.. திருமாவளவன் கூறுவது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com