\
Thirumavalavan Responds to Vaiko’s Nobel Prize Jibe
திருமாவளவன்Pt web

திமுக, தவெக இணைந்து செயல்பட வேண்டும் - வைகோவுக்கு பதில்.. திருமாவளவன் கூறுவது என்ன?

”திருமாவளவனுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலாக பேசியிருக்கும் நிலையில், அதற்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
Published on

தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதுடன், சமீபத்தில் நடைபெற்ற தவெக கூட்டணி கூட்டத்திலும் பங்கேற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அப்போது, விரைவில் அந்தக் கூட்டணிக்கு பெயர் வைக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்தசூழலில் தான், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தோம். இப்போதும் திமுகவுடனான நட்பு தொடர்கிறது. விசிக தவெக கூட்டணியில் இல்லை. அதுக்குறித்து பரிசீலிப்போம் எனத் தெரிவித்தது தவெக கூட்டணியில் இருந்து மட்டுமில்லாமல், பொதுவெளியிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, திருமாவளவன் மாற்றி மாற்றி பேசுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

வைகோ
வைகோweb

இந்தசூழலில் தான், தவெக கூட்டணி கட்சிகளில் ஒன்றான மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், திருமாவளவன் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், திருமாவளவன் கருத்துக்கு நோபல் பரிசு அளிக்கலாம் என கிண்டலாக தெரிவித்தார்.

இந்தநிலையில் தான், நோபல் பரிசு எனக்கு கிடைத்தால் வைகோவுக்கு நன்றி சொல்வேன் என விசிக தலைவர் திருமாவளவன் வைகோவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக மற்றும் தவெக இடையே அரசியல் ரீதியாகப் பலத்த போட்டி மற்றும் எதிர் நிலைபாடுகள் இருந்தாலும், தேசிய அளவில் பாஜகவின் அரசியலையும் மதவாதத்தையும் வீழ்த்த, கொள்கை எதிரியான தவெக-வும், தொடர்ந்து பாஜகவை எதிர்த்து வரும் திமுகவும் ஒரே அணியில் (இந்தியா கூட்டணி) பயணிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம்.

என்னுடைய இந்த தேசிய அளவிலான பார்வையைத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாலோ அல்லது ஊடகவியலாளர்களாலோ எளிதில் புரிந்துகொள்ள முடியாது. திருமாவளவன் என்ன குழப்புகிறார், அவருக்கு என்ன ஆச்சு? என்று கேட்பார்கள். ஆனால், அது அவர்களின் புரிதலில் உள்ள சிக்கலே தவிர, என் பார்வையில் உள்ள சிக்கல் அல்ல என்றும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

Thirumavalavan Responds to Vaiko’s Nobel Prize Jibe
குதிரை பேர வழக்கு | செந்தில் பாலாஜிக்கு கிடைத்தது முன்ஜாமீன்.. பரபரப்பான வாதத்திற்கு பிறகு தீர்ப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com