ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது குறிப்பிட்ட சமூக மக்களை இழிவாக பேசியதாக போடப்பட்ட வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார்.
இதன் விசாரணை முடிவில் நீதிபதி வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
“பாஜக வருமானவரித்துறையை வைத்து எதிர்க்கட்சியை மிரட்டுகிறது என்று முதல்வர் சொல்வது உண்மைதான். முதல்வர் சொல்லும் அனைத்தையும் எதிர்க்க நான் என்ன மன நோயாளியா? இவ்விஷயத்தில் முதல்வர் சொன்னது எனக்கு சரி. மத்திய அரசு வருமான வரித்துறை சோதனையை பழிவாங்கும் நடவடிக்கையாகவே பயன்படுத்துவதாக தெரிகிறது. பொன்முடி வீட்டில் சோதனையில் எடுத்ததை காட்டியது போல் மற்றவர்களின் வீடுகள் சோதனை செய்ததை வெளியே காட்டியது உண்டா?
பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் எதிர்க்கட்சிகளையும் பாஜக அல்லாத மாநிலத்தில் ஆளுங்கட்சியையும் சோதனை செய்கிறது.
திமுக அமைச்சர்களை குறிவைத்து இந்த சோதனையை செய்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் எந்த தவறும் நடக்கவில்லையா? இரண்டு மாதத்தில் தேர்தல் அறிவிக்கும் நிலையில் வருமான வரித்துறை சோதனை செய்வது ஏன்?
ஜெகத்ரட்சகன், எ.வ வேலு போன்றோர் ஏதோ நேற்று பணக்காரர்கள் ஆகவில்லை.... அப்படி இருக்க தேர்தல் வரும்போது சோதனை செய்வது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதில் நேர்மை என்று ஒன்றும் இல்லை” என்றார்.
“பள்ளிகளில் அழுகிய முட்டைகள் வழங்குகிறார்கள். குழந்தைகள் என்ன குரல் எழுப்புவார்கள் என்ற அடிப்படையில்தான் வழங்கியிருப்பார்கள். 60 ஆண்டுகளாக ஆண்ட நிலையிலும் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத நிலையேதான் உள்ளது.
உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு வழங்கும் உணவைப்போல நாட்டு குழந்தைகளுக்கு வழங்கவில்லை என்றால் அந்த திட்டத்தையே நீங்கள் கைவிடலாம்”
“இங்கு உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி இருக்கும் வரை வர்ணாசிரம எதிர்ப்பு சனாதன ஒழிப்பு இருக்கும். எதுவும் ஆதிக்க சாதியும் இல்லை, அடிமை சாதியும் இல்லை”
“ஈழத்தில் நடந்ததை போலத்தான் தற்போது பாலத்தீனிலும் நடந்துள்ளது. அம்மக்கள் தங்களின் பேரன்பு பெருந்தன்மையால் அழித்து ஒழிக்கப்படுகிறார்கள். இன்று பாலஸ்தீனத்தில் நடந்தது நாளை தமிழகத்தில் நடக்கும்”
“2024ல் தனித்து போடியிடுகிறேன். 20 ஆண்கள் மற்றும் 20 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கிறேன்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார். உறுதியாக கட்சி ஆரம்பிப்பார். படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு அவ கட்சி ஆரம்பித்து அதற்கு பிறகு அவருடன் இணைந்து செயலாற்றுவேனா என பேசி சொல்கிறேன். விஜய் வந்த பிறகு அவரிடம் ‘சீமானுடன் செல்வீர்களா’ என்று கேளுங்கள்” என்றார்.
பிறகு செய்தியாளர்களைப் பார்த்து, “சிக்குனான் சீமான் என்று கேட்டுக்கொண்டே இருக்க கூடாது....” என நகைச்சுவையாக பதிலளித்தபடி கடந்து சென்றார்.