பஸ் கண்டக்டர், பாக்யராஜ் கட்சி, பொதுப்பணித்துறை அமைச்சர்.., யார் இந்த எ.வ.வேலு?

பொதுப்பணித்துறை அமைச்சரும் திமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, மருத்துவமனை சார்ந்த கல்லூரி, அவரது வீடு என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
எ.வ.வேலு
எ.வ.வேலுpt web

தமிழ்நாடு முழுவதிலும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காலை 7 மணி முதல் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எ.வ.வேலு தற்போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை என இரு முக்கியமான துறைகளின் அமைச்சராக உள்ளார். எனவே அவர் வகிக்கும் துறைகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா? வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வரி ஏய்ப்பு செய்துள்ளாரா? என்பதன் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில்

யார் இந்த எ.வ.வேலு என்பது குறித்து பார்ப்போம்.
எவ வேலு
எவ வேலுpt web

அரசியல் என்ட்ரி:

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்திலுள்ள சே.கூடலூர் கிராமத்தில், 1951-ம் ஆண்டு, மார்ச் 15-ம் தேதி பிறந்தவர் எ.வ.வேலு, ஆரம்பத்தில் பம்ப்செட் மோட்டாரின் ஆயில் இன்ஜின் ரிப்பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் பிறகு அந்த வட்டாரத்தில் பிரசித்தமான தாமோதரன் பஸ் சர்வீஸில் கண்டக்டராக வேலை பார்த்தார்.

எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்ததால், 1972-ல் அ.தி.மு.க. தொடங்கப்பட்டபோது அதில் இணைந்தார். தண்டராம்பட்டு ஒன்றியத் தொகுதி துணை அமைப்பாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. 1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிடுவதற்காக முயற்சி செய்து அது முடியாமல் போனது. ஓரளவுக்கு மக்கள் செல்வாக்கு இருந்தபோதும் சரியான சிபாரிசு இல்லாததால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்து அப்போது அதிமுகவில் மிகவும் செல்வாக்காகவும் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகவும் இருந்த ப.உ.சண்முகத்திடம் உதவியாளராகச் சேர்கிறார்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ வாய்ப்பு:

‘வெட்டிட்டு வான்னா கட்டிட்டு வந்துடுவான்’ என கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. அதற்கேற்ப களத்தில் இறங்கி வேலை பார்த்து ப.உ.சண்முகத்தின் மனதில் மிக விரைவில் இடம் பிடித்தார். அதன் தொடர்ச்சியாக, 1984 தேர்தலில், அவரின் சிபாரிசில் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிடுவதற்கு இடம் கிடைக்கிறது. தன்னுடைய பேச்சுத்திறமை, கூத்துத் திறமைய வைத்து தனககுத் தானே பிரசாரம் செய்து 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைகிறார் எ.வ.வேலு. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னாடி ஜெ.அணி, ஜா.அணியின்னு அதிமுக பிரிய ஜானகி அணியில் சேர்ந்தார் வேலு. இரண்டு அணியும் ஒன்றாகி, ஜெயலலிதா தலைமையில கட்சி வந்த பின்னர் அதிலிருந்து விலகினார்.

av. velu
av. velupt desk

பின்னர் எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசான நடிகர் பாக்யராஜின் `எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ கட்சியில் இணைந்து அதன் கொள்கைபரப்புச் செயலாளராகிறார் எ.வ.வேலு. சில ஆண்டுகளில் அந்தக் கட்சி கலைக்கப்பட ’புரட்சித் தலைவி திராவிடத் தாய்தான்’ என்ற புத்தகம் தயார் செய்து அதிமுகவில் மீண்டும் இணைய திட்டமிட்டு அது நடக்காமல் போகிறது. தொடர்ந்து, ஆர்.எம்.வீரப்பன் தொடங்கிய எம்.ஜி.ஆர் கழகத்துல இணைந்து பணியாற்றினார் எ.வ.வேலு. ஆனால், மீண்டும் திமுகவில் இணைய அப்போதைய திமுக அமைச்சர் மாதவன் மூலமாக முயற்சி செய்து திமுகவிலும் சேர்கிறார்.

திமுகவில் எம்.எல்.ஏ & மாவட்டச் செயலாளர்:

2001 தேர்தலில் திமுக சார்பில் தண்ட்ராம்பட்டு தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கிறது.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட த.மா.கா வேட்பாளரைவிட 5000 வாக்குகள் அதிகமாக வாங்கி எம்.எல்.ஏவாக வெற்றி பெறுகிறார் எ.வ. வேலு. 2003-ம் ஆண்டு நடைபெற்ற உட்கட்சித் தேர்தலிலும் வெற்றி பெற்று மாவட்டச் செயலாளராகவும் தேர்தெடுக்கப்படுகிறார். 2006 தேர்தல்ல மீண்டும் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனதோடு உணவுத்துறை அமைச்சராகவும் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் ஆக்கப்படுகிறார். தொடர்ந்து, சினிமா தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் கலைஞர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராகவும் ஆகிவிடுகிறார்.

ஹாட்ரிக் வெற்றி & அமைச்சர் :

தொடர்ந்து, 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல்களில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகிறார் எ.வ.வேலு. 2021 தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததும் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை பொறுப்பு எ.வ,.வேலுவுக்கு வழங்கப்படுகிறது. திமுகவில் ஆளுமைமிக்க முன்னணித் தலைவர்களுள் ஒருவராக எ.வ.வேலு கருதப்படுகிறார். கடந்த 22-ம் தேதி திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் தி.மு.க. வடக்கு மண்டல அளவிலான வாக்குசாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டத்தையும் மிகப்பிரமாண்டமாக நடத்தி முடித்தார்.

தேர்தலாகட்டும், கட்சிப் பணிகளாகட்டும் வேலு களத்தில் இறங்கினால் வெற்றி நிச்சயம் என்கிற அளவுக்கு களப்பணியில் பெயர்பெற்றவர் எ.வ.வேலு.

இந்தநிலையில் இன்று காலையிலிருந்து அவர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்ற வருகிறது. அண்மையில் அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com