“நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்தபோது திமுக எப்படி ஆதரித்தது?” – சீமான் கேள்வி
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை சானிடோரியம் தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள அயோத்தி தாச பண்டிதர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலரஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசுகையில்...
சிற்றூரில் இருக்கும் மாணவருக்கு மருத்துவக் கனவு வரக் கூடாது:
“பலமுறை நீட் தேர்வை கண்டித்து, எதிர்த்துப் பேசி இருக்கிறேன். மாநில சுயாட்சி நாயகர் என பாராட்டு விழா எடுப்பவர்கள் வெட்கப்பட வேண்டும். நீட் சிறப்பு பயிற்சி என்கிற பேரில் பலகோடி சம்பாதிக்கிறார்கள். நீட் தேர்வை நடத்துகிற நிறுவனம் எது? அமெரிக்க தனியார் நிறுவனம் நடத்துகிறது. நீட் தேர்வு எழுதினால் எப்படி தரமான மருத்துவர்கள் வருவார்கள். சிற்றூரில் இருக்கும் மாணவருக்கு மருத்துவக் கனவு வரக் கூடாது என்ற நிலை உருவாகும்
நீட் தேர்வால் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்து எப்படி இந்த முறையை கொண்டு வந்தீர்கள்?
அன்று நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்த போது எப்படி திமுக ஆதரித்தது. சரி இன்று நீட் தேர்வை ரத்து செய்ய 60 லட்சம் பேரிடம் கையொப்பம் வாங்கி என்ன செய்தீர்கள்? அதை எங்கு கொடுத்தீர்கள்? இது பாதிக்கும் என தெரிந்து எப்படி இந்த முறையை கொண்டு வந்தீர்கள்? ஆடைகள் கட்டுப்பாடு எந்த மாநிலத்தில் இப்படி உள்ளது? மூக்குத்தி, தோடு எவ்வளவு பெரியது. அதில் பிட் எடுத்துக் கொண்டு போய் தேர்வெழுதுவார்களா?
வடமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் போது புத்தகம் வைத்து எழுதுகிறார்கள்:
கல்வி ஏன் சுகமாய் இல்லாமல் சுமையாய் இருக்கிறது இங்கு? வட இந்தியாவில் இதே நீட் தேர்வு எழுதும் போது புத்தகம் வைத்து எழுதுகிறார்கள். நான் வீடியோ தருகிறேன்... வெளியிடுங்கள். பொத்தானில் பிட் வைக்க முடியுமா? அதை ஏன் அகற்ற சொல்கிறீர்கள். மூக்குத்தியில் பிட் வைக்க முடியும் என்கின்றனர்... ஆனால் ஓட்டு போடும் பெட்டியில் எதும் நடக்காது என்கின்றனர். இதை நம்ப வேண்டுமா நாங்கள்? என் பிள்ளைகளை அழவைத்து தேர்வு வைக்கிறீர்கள்... என்ன மன நிலையில் அவர்கள் தேர்வு எழுதுவார்கள்?
நம் கல்வி முறையே தவறாக இருக்கு:
ஒரு நாள் நிச்சயம் இதை மாற்றுவேன். விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்கிறார்கள்... பஹல்காம், புல்வாமாவில் தாக்குகிறான் அங்கு சோதிக்கவில்லையா?
ஸ்டாலின் என்றால் சாதனையா? சாதனை ஒன்றுமே இல்லாத ஆட்சியை இத்தனை ஆண்டு நடத்தினால் அது சாதனைதானே. பிரதமர், முதலமைச்சர் எல்லாரும் தேர்வெழுத வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் அமைச்சர்களாகட்டும். நம் கல்வி முறையே தவறாக இருக்கு” என்றார்.