கொடைக்கானல் | விஜய்க்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அத்துமீறும் பவுன்சர்கள் - நடந்தது என்ன?
செய்தியாளர்: செல்வ. மகேஷ் ராஜா
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, தாண்டிக்குடி என்ற கிராமத்தில் நடிகர் விஜயின் ஜனநாயகன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து விஜய் தங்கும் இடத்தில் இருந்து, படப்பிடிப்பு நடைபெறும் அசன் கோட்டை கிராமம் வரை தோட்டப் பகுதிகளுக்கு தோட்ட பணிக்குச் செல்லும் விவசாயிகளிடம், விஜயின் பாதுகாவலர்கள் கடுமையான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.
அதேபோல் அந்தப் பகுதிக்குச் செல்லும் வனத் துறையினரை பணிக்குச் செல்ல விடாமல் தடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. வனத் துறையினருடன் விஜயின் பாதுகாவலர்கள் வாக்குவாதம் செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகார் குறித்து கோட்டாட்சியர், திருநாவுக்கரசிடம் கேட்டபோது, கிராமச் சாலைக்குள் மக்கள் செல்வதை தடுக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்றும், காவலர்களை அனுப்பி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.