சத்யபாமா முதல்முறையா..? சட்டப்பேரவையை வழிநடத்திய பெண்கள்.. முதல் பெண் யார் தெரியுமா?
சட்டப்பேரவையை வழிநடத்தும் தலைவராக சபாநாயகர் திகழ்ந்து வரும் நிலையில், அவர் இல்லாத சூழலில் அவையை துணை சபாநாயகர் வழிநடத்துவார். அதேபோல சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகிய இருவரும் அவையில் இல்லாத சூழலில் அவையை நடத்த மாற்று பேரவைத் தலைவர்கள் வழக்கமாக நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் தற்போது அவையை வழிநடத்த 6 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில் தவெகவில் இருந்து விஜய் சரவணன், சத்யபாமா, மதார் பதுருதீன், திமுகவில் இருந்து காதர் பாட்சா முத்துராமலிங்கம், அதிமுகவில் இருந்து தளவாய் சுந்தரம், காங்கிரஸ் கட்சியில் இருந்து தாரகை கத்பர்ட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தச் சூழலில் நேற்று அவையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நிலையில், மாற்று பேரவைத் தலைவர்களில் ஒருவரான சத்யபாமா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை சில நிமிடங்கள் வழிநடத்தினார்.
இதனைத் தொடர்ந்து சத்யபாமாதான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய முதல் பெண் உறுப்பினர் என பல்வேறு செய்திகள் வெளியாகின. எனினும் இதற்கு முன்னரே அந்த சபாநாயகர் இருக்கையில் பெண் உறுப்பினர்கள் அமர்ந்து சபையை வழிநடத்தியுள்ளனர்
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1937-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ருக்மணி லட்சுமிபதி, சென்னை மாகாண சட்டப்பேரவையின் துணை பேரவைத் தலைவராக இருந்து அவையை வழிநடத்தியுள்ளார். இவர் பின்னர் சென்னை மாகாண சட்டப்பேரவையின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியை சார்ந்த மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.பொன்னம்மாள் 1996-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக இருந்து எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். பல்வேறு காலகட்டங்களில், தமிழ்நாடு சட்டப்பேரவை மாற்று பேரவைத் தலைவர்கள் பட்டியலில் பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் இடம்பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

