சட்டப்பேரவையை வழிநடத்திய முதல் பெண் சபாநாயகர்.. எம்.எல்.ஏ. சத்யபாமா நெகிழ்ச்சி பேட்டி!!
தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பான, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட்-5 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையின் சபாநாயகராக அவையை ஜே.சி.டி. பிரபாகர் வழிநடத்தி வரும் நிலையில், துணை சபாநாயகராக ரவிசங்கர் இருந்து வருகிறார். இதற்கிடையில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், இருவரும் சட்டப்பேரவையில் இல்லாத நேரத்தில் அவையை வழிநடத்த எம்.எல்.ஏ. சத்யபாமா உள்ளிட்ட 6 உறுப்பினர்களை மாற்று சபாநாயகர் குழுவை நியமித்திருக்கிறார்.
இந்தச்சூழலில் தான், இன்று கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வந்த நிலையில், சட்டப்பேரவை சபாநாயகரும், துணை சபாநாயகரும் தற்காலிகமாக அவையில் இல்லை. இதையடுத்து, திருப்பூர் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ சத்தியபாமா, வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் பெண் சபாநாயகராக சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து 15 நிமிடங்கள் சட்டப்பேரவையை வழிநடத்தினார்.
இதற்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவைக்கு உள்ளே வாழ்த்து தெரிவித்த நிலையில், சத்தியபாமா சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரலாற்றுச் சிறப்புமிக்க சபாநாயகர் இருக்கையில் அமரும்போது சிறு பதற்றம் இருந்ததாகவும், இருந்தபோதிலும் அது மகிழ்ச்சி அளித்ததாகவும், வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாக இருந்தது என்றும் கூறினார். மேலும், இதை தமிழ்நாட்டின் பெண்களுக்கு சமர்ப்பிப்பதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியில் அனைத்தும் சாத்தியம், அனைத்தும் வளர்ச்சி என்று இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
