காவல்துறையில் அதிரடி மாற்றம்.. சென்னை உளவுத்துறைக்கு புதிய அதிகாரி.. யார் இந்த சந்தோஷ் ஹதிமானி?
தமிழ்நாட்டில் 13 முக்கிய காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், சென்னை மாநகர உளவுத்துறையின் இணை ஆணையராக சந்தோஷ் ஹதிமானி IPS நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டு உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க்கிடம் கூடுதலாக ஏடிஜிபி பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறையில் செய்யப்பட்ட இந்த மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு என அரசின் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் உளவுத்துறையின் பங்கு முக்கியமானது. தமிழ்நாட்டில். அப்படிப்பட்ட உளவுத்துறையின் ஐஜியாக இருக்கும் அஸ்ரா கார்க்கிற்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அந்த துறையின் ஏடிஜிபி பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை மாநகர காவல் ஆணையரின் நேரடிப் கட்டுப்பாட்டில் இயங்கும் சென்னை காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையர் பதவியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
திமுக ஆட்சியில் இந்தப் பதவியில் பணியமர்த்தப்பட்ட தர்மராஜன் IPS சிறப்பாகச் செயல்பட்டிருந்தார். அதன் பின்னர் அவர் வேலூருக்கு மற்றம் செய்யப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின் முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். தர்மராஜன் IPS-க்கு பின்னர் சென்னைப் பெருநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது அந்த இடத்துக்கு சந்தோஷ் ஹதிமானி IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு பேட்ச் IPS அதிகாரியான சந்தோஷ் ஹதிமானி காஞ்சிபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியுள்ளார். சென்னையில் காவல் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். நெல்லை ஆணையராகவும், கடைசியாக சேலம் சரக டிஐஜியாகவும் அவர் பணியாற்றியுளாளார் என்பது குறிப்பிடத்தக்கது.

