இலவச உணவை யார் கேட்டார்கள்..?? தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் கேள்வி!
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 86 நாட்களாக வேலையின்றி போராடி வருகின்றனர். தனியார்மயமாக்கல் நடவடிக்கையை கண்டித்து, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் இலவச உணவு அறிவிப்பை யார் கேட்டார்கள் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூய்மை பணிகளை தனியார்மயமாக்கிய மாநகராட்சியை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கையால் 86 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் வேலையின்றி தவித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாநகராட்சியில் தூய்மை பணியை தனியார் மயமாக்குவதை கண்டிக்கும் வகையில் ரிப்பன் பில்டிங் அலுவலகம் அருகே உட்பட பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.
அந்த வகையில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே சுமார் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, "86 வது நாளாக வேலையில்லாமல் தூய்மை பணியாளர்கள் போராடிவருகின்றனர், திமுக அரசு அறிவித்த தேர்தல்வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், மூன்று வேளை இலவச உணவுவழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதை யார் கேட்டார்கள்? ஏற்கனவே, கொடுத்த வாக்குறுதியான பணி நிரந்தரத்தை நிறைவேற்றுங்கள் என்று தான் அவர்கள் போராடி வருகிறார்கள்" என தெரிவித்தார். தொடர்ந்து, மழை காலங்களில் சம்பளமே வாங்காமல் மாநகராட்சியின் கீழ் மக்களுக்காக உழைத்தவர்கள் தூய்மைப் பணியாளர்கள்” என்றார்.
தூய்மைப் பணியாளர்களுக்கான அனைத்து கதவுகளும் திறந்தே இருப்பதாக மேயர் பிரியா கூறியது தொடர்பான கேள்விக்கு பதில்அளித்த அவர், " மாநகராட்சியில் மனுகொடுக்க சென்றால் கைதுசெய்கிறார்கள், பூங்காவில் கூடினால் கைதுசெய்கிறார்கள் என தொடர்ச்சியாக கைது நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கே கதவு திறந்து இருக்கிறது" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ”25க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் தங்கள் மீது போடப்பட்டுள்ளது நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டம் நிற்காது. தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட அனுமதி மறுக்கப்படுகிறது. அதையும் மீறி போராடுபவர்கள் மீது அடக்குமுறை திணிக்கப்படுகிறது. இந்த பிரச்சனையில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்" எனவும் தெரிவித்திருக்கிறார்.

