மணல் கொள்ளை | திமுக துரைமுருகன் உள்ளிட்ட 28 பேர் மீது வழக்குப்பதிவு.. வெளியானது FIR!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு அமலாக்கத்துறையினர் பல்வேறு மணல் குவாரிகளில் சோதனை நடத்தினர். அப்போது, பெரிய அளவில் மணல் திருட்டு நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் 1,427 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. இதுதொடர்பாக 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு அமலாக்கத்துறை அறிக்கை அனுப்பியது. அதன் அடிப்படையில், அப்போதைய திமுக ஆட்சியில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடங்கியது.
இந்த முறைகேடு தொடர்பாக, கடந்த 6-ம் தேதி 34 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியிருக்கிறது.
அதன்படி, கடந்த 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்ட மணல் குவாரிகளில் முறைகேடுகள் தொடர்பாக, துரைமுருகன் உள்ளிட்ட 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 18 அரசு அதிகாரிகளும், 10 தனியார் நபர்களும் அடங்குவர்.
மேலும், ஏச்சம்பாடி, கந்தனேரி, மாதவப்பெருமாள் கோவில், ஒருவந்தூர் ஆகிய நான்கு குவாரிகளில் மட்டும் 1.42 கோடி யூனிட் மணல் சட்டவிரோதமாக அகழ்வு செய்யப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.1,427.34 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை, சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் உறுதிப்படுத்தப்பட வேண்டியவை ஆகும்.

