சேலம் | குழந்தை திருமணம் செய்த இளைஞர் - கைது செய்து பிணையில் விடுவித்த போலீசார்... காரணம் என்ன?
செய்தியாளர்: தங்கராஜூ
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். கட்டட வேலைக்குச் சென்ற இடத்தில் பள்ளி மாணவியுடன் பேசி பழகி வந்துள்ளார். நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறி இருவரும் 2 வருடமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறுமியை அழைத்துச் சென்ற தங்கராஜ், நேற்று காலையில், பெரியோர்கள் முன்னிலையில், ஓமலூரில் உள்ள கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.
இதையறிந்த பெண்ணின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடத்திய விசாரணையில், குழந்தை திருமணம் செய்து கொண்டது, வீடியோ ஆதாரங்களுடன் தெரியவந்தது. இதையடுத்து குழந்தை திருமணம் செய்த தங்கராஜை போலீசார் கைது செய்தனர்.
அதேநேரம் பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாக 55 நாட்களே உள்ளதாகவும், பெண்ணின் விருப்பத்துடன் திருமணம் நடந்ததாலும், உடனடியாக காவல் நிலைய பிணையிலேயே விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த சிறுமி பெற்றோருடன் செல்ல மறுத்ததால் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.