சேலம் | விபத்தில் சிக்கிய காரை காணச் சென்ற இளைஞர் விபத்தில் பலியான சோகம்!
செய்தியாளர்: ரவி
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சந்தனகிரி பிரிவு சாலை சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற சொகுசு கார் சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரில் பயணம் செய்த அனைவரும் சிறு காயங்களின்றி உயிர் தப்பினர்.
இந்நிலையில் கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து எனபவரின் மகன் லோகேஷ் (23) தான் ஓட்டிவந்த பால் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு விபத்தை பார்க்க சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற டூரிஸ்ட் வேன் எதிர்பாராத விதமாக லோகேஷ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லோகேஷ் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த உறவினர்கள் சம்பவ இடத்தில் சென்று டூரிஸ்ட் வேன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர் இதையடுத்து அங்கு வந்த ஆத்தூர் நகர போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.