”அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்..” - சபாநாயகர் மீது அதிருப்தி? கொட்டித்தீர்த்த TVK MLA!
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. இந்த முறை தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு முதல்முறை எம்.எல்.ஏக்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை திறம்பட வழிநடத்தும் விதமாக மூத்த சட்டமன்ற உறுப்பினரான ஆயிரம்விளக்கு தொகுதியில் தவெக சார்பில் வென்ற ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், சட்டசபை நிகழ்வுகள் பொதுமக்களால் ஆர்வத்தோடு கவனிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் பேசும் வார்த்தைகள்தான் அதிகளவில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும். ஆனால் இந்த முறை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் பேசும் சர்ச்சைக்குரிய வார்த்தைகளையும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கி வருகிறார்.
அதிலும் தவெக அரசின் முக்கிய அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் சட்டப்பேரவையில் பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தைகளை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். ஆளும்கட்சி உறுப்பினர்களின் வார்த்தைகளை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது குறித்து சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. மேலும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் இந்தச் செயல்பாடு காரணமாக அவர் மீது தவெக எம்.எல்.ஏக்களும், தவெக ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், தவெக எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் பேசினார். அப்போது அவர் வெகுநேரம் முதல்வர் விஜயை புகழ்ந்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நடுவில் குறுக்கிட்டு மானியக் கோரிக்கை பற்றி மட்டும் பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவர் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்த நிலையில், அப்போதும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நடுவில் குறுக்கிட்டு உறுப்பினர்கள் தங்கள் கருத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது சபாநாயகரை நோக்கி ரெட்டியார்பட்டி நாராயணன், "எதிர்க்கட்சியாக இருந்தாலும் பேரவைத் தலைவர் உங்களுக்குத் தேனையும், எங்களுக்கு பாலையும் தருகிறார்" என்று கூறினார்.
ஏற்கெனவே சமூகவலைத்தளத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மீது ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகப் பேசப்பட்டு வந்த நிலையில், ஆளும் கட்சி MLA ஒருவர் சட்டப்பேரவையில் முதல்வர் முன்னிலையில் இப்படி பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

