“தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது” - அல்வா கொடுக்கும் போராட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு

தமிழக அரசுக்கு, மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக திருநெல்வேலி மற்றும் சென்னை கிளாம்பாக்கத்தில் திமுகவினர் அல்வா வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக-வின் அல்வா கொடுக்கும் போராட்டம்
திமுக-வின் அல்வா கொடுக்கும் போராட்டம்pt desk

செய்தியாளர்கள்: மருது பாண்டி, உதயகுமார்

தமிழக அரசுக்கு, மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக திருநெல்வேலி மற்றும் சென்னை கிளாம்பாக்கத்தில் திமுகவினர் அல்வா வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதில் கலந்து கொண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய போது...

“ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டியது. அடிக்கல் நாட்டப்பட்டு இத்தனை ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் எய்ம்ஸ் வரவில்லை. இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் மத்திய அரசு திருந்தவில்லை.

திமுக-வின் அல்வா கொடுக்கும் போராட்டம்
திமுக-வின் அல்வா கொடுக்கும் போராட்டம்pt desk

“மோடி அரசின் ஆயுட்காலமே முடிய போகிறது”

மோடி அரசின் ஆயுட்காலமே முடிய போகிறது. ஆனால், இதுவரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கவில்லை. அதே போன்று நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெருவெள்ளம் ஏற்பட்டு தூத்துக்குடி மக்கள் தத்தளித்தார்கள். வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் பார்வையிட்டனர். ஆனால், ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை

திமுக-வின் அல்வா கொடுக்கும் போராட்டம்
“தென்மாநிலங்களுக்கு நிதி உதவி செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது” - கனிமொழி எம்.பி.

“நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்கள் உரிமையை தான் கேட்கிறோம்”

இதுவரை 6 லட்சம் கோடி ரூபாயை ஜிஎஸ்டி-யாக தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் மட்டும்தான் தந்திருக்கிறது.

நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்கள் உரிமையைதான் கேட்கிறோம். எங்களிடமிருந்து பிடித்து வைத்திருக்கும் 71 சதவீதத்தில் இருந்து 10 சதவீத வரியைதான் கேட்கிறோம்.

திமுக-வின் அல்வா கொடுக்கும் போராட்டம்
திமுக-வின் அல்வா கொடுக்கும் போராட்டம்jpt desk

“தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது”

அல்வாக்கு பெயர் பெற்ற திருநெல்வேலியில் இருந்து மோடிக்கு மக்கள் அல்வா கொடுப்பார்கள். இந்த தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது. தமிழகத்திற்கு வரி பங்கீடு குறித்து நிர்மலா சீதாராமன் பேசுவது பித்தலாட்டம். இங்கு உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு இங்கே வரி செலுத்த வேண்டும் என்பதுதான் உரிமை” என்றார்.

“வெள்ளை அறிக்கை வெளியிட முடியாது. வெள்ளரிக்காய் வேண்டுமென்றால் வாங்கிக் கொடுக்கிறோம்”

தொடர்ந்து முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்ற அண்ணாமலையின் கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்... “வெள்ளை அறிக்கை வெளியிட முடியாது. வெள்ளரிக்காய் வேண்டுமென்றால் வாங்கிக் கொடுக்கிறோம். நிர்மலா சீதாராமனின் கணவர் இந்திய பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எனவே கணவரின் பேச்சை கேட்டுக் கொண்டால் நல்லது” என்று ஆர்எஸ்.பாரதி பேசினார்.

கிளாம்பாக்கம் - திமுக-வின் அல்வா கொடுக்கும் போராட்டம்
கிளாம்பாக்கம் - திமுக-வின் அல்வா கொடுக்கும் போராட்டம்pt desk

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில், திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தனர். தொடர்ந்து ‘மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் வஞ்சிக்கிறது. வெள்ள நிவாரணத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு இதுவரை நிதி வழங்கவில்லை.

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அளிக்கும் நிதிப்பகிர்வை மக்களுக்கு உணர்த்தும் வகையில் திமுக சார்பில் அல்வா கொடுத்து வருகிறோம்’ என்றனர்.

அல்வா பாக்கெட்டுகளை பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு வழங்கி வருகின்றனர். இதில், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமையில் ஏராளமான திமுகவினர் அல்வா கொடுத்து “மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்த நிதி பங்கீடு இதுதான்” என பொதுமக்களிடம் கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com