திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு - ஆர்.எஸ்.பாரதி! தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்குகிறதா?
அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், அதிமுக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்றும், கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமுறை அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். திமுகவும் அதிமுகவும் சட்டமன்றத்தில் ஒரே வரிசையில் அமர வேண்டிய சூழலைக் காலம் ஏற்படுத்திவிட்டது என்றும், இதைப் பார்க்கும் இரு கட்சித் தொண்டர்களும் தாங்கள் இணைந்துவிட்டதாகவே நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார். மு.க.ஸ்டாலினால்தான் திராவிட இயக்கத்தைக் காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு அதிமுக தொண்டர்களே வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
திருச்சி கிழக்கு உட்பட 6 தொகுதிகளுக்கு அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனவே, இடைத்தேர்தலிலேயே அதிமுக கூட்டணிக்கு திமுக தயாராகிறதா? இதற்காக ஆர்.எஸ்.பாரதி மூலம் அக்கட்சி ஆழம் பார்க்கிறதா என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. திமுக, அதிமுக என்ற 2 கட்சிகளுக்கும் சேர்த்து குறைந்தது 45 சதவிகித ஓட்டு வங்கி இருப்பதாக கூறப்படுவதால் விஜய்க்கு பதிலடி கொடுக்க கழகங்கள் இணைகின்றனவா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
