அனல்பறக்க போகும் நெல்லை தொகுதி! ஒரு வழியாக வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்..ஆனா மயிலாடுதுறை மிஸ்ஸிங்!

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராபர்ட் புரூஸ், நயினார் நாகேந்திரன், ஜான்சிராணி
ராபர்ட் புரூஸ், நயினார் நாகேந்திரன், ஜான்சிராணிpt web

நீடித்த இழுபறி

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தனர். மயிலாடுதுறை, நெல்லை தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டது. தற்போது நெல்லை தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் புதுச்சேரியுடன் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரியில் வைத்திலிங்கம் மீண்டும் களம் காண்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு திருவள்ளூர், விருதுநகர், கன்னியாகுமரி, கரூர், சிவகங்கை, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போதும் நெல்லை மற்றும் மயிலாடுதுறைக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. மூத்த நிர்வாகிகள் பலரும் தங்களுக்கு தான் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதால் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியானது.

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

ராபர்ட் புரூஸ்
ராபர்ட் புரூஸ்

இந்நிலையில் நெல்லை மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். ராபர்ட் புரூஸ் மற்றும் பால்ராஜ் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தது. போட்டியில் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட சில மூத்த தலைவர்களும் இருந்தனர். அதேசமயத்தில் பால்ராஜுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே அதிருப்தி எழுந்த சூழலில், ராபர்ட் புரூஸ்க்கு ஆதரவான சூழலே இருந்தது. இந்நிலையில் அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராபர்ட் புரூஸ், நயினார் நாகேந்திரன், ஜான்சிராணி
மக்களவை தேர்தல் 2024 | வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள்... யார் யாருக்கு எந்தெந்த தொகுதி?

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்

அதேபோல், விளவங்கோடு எம் எல் ஏ விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனது பதவியையும் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலுடனே விளவங்கோடுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் விளவங்கோடுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தாரகை கதர்பர்ட் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தாமதத்திற்கான காரணம் என்ன?

வேட்பாளர் அறிவிப்பு குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, “வேட்பாளரை அறிவிப்பதற்கான இழுபறியெல்லாம் ஏதும் இல்லை. இது ஒரு தேசியக் கட்சி. காஷ்மீர் முதல் குமரி வரை ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில நிர்வாகிகள் கொடுக்கும் முடிவை வைத்தும் தேசியத் தலைமை ஆய்வு மேற்கொண்டும் வேட்பாளர்களை அறிவிக்கின்றனர். இதில் இழுபறியெல்லாம் ஏதும் இல்லை, தாமதமும் இல்லை. இன்று இரவுக்குள் அறிவிப்பு வந்துவிடும். ராபர்ட் புரூஸ் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அம்மக்களுக்காக பணியாற்றி வருபவர். கன்னியாகுமரியில் இந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவருக்கும், நெல்லையில் கிறித்தவ நாடாருக்கும் கொடுத்துள்ளோம்.

விளவங்கோட்டில் சாதாரண பொருளாதார பின்னணியைக் கொண்ட பெண்மணிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். அவரது வீடு கூட கடன் வாங்கி ஏலத்தில் சென்றுவிட்டது. சொந்த வீடு கூட அவருக்கு இல்லை. சாதாரண காங்கிரஸ் ஊழியருக்குத்தான் வாய்ப்பு கொடுத்துள்ளோம்” என தெரிவித்தார்.

ராபர்ட் புரூஸ், நயினார் நாகேந்திரன், ஜான்சிராணி
'ஆளுநராக இருந்த நான்... உங்கள் அக்காவாக திரும்பி வந்திருக்கின்றேன்' - தமிழிசை

களம் எப்படி?

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி, ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பா சமுத்திரம், பாளையம்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் ஆலங்குளம் மட்டும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தது. மீதமுள்ளவை அனைத்தும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவை. இதில் பாளையம் கோட்டை, ராதாபுரத்தில் திமுகவும், அம்பா சமுத்திரம், ஆலங்குளத்தில் அதிமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும், நெல்லையில் பாஜகவும் எம் எல் ஏக்களைப் பெற்றுள்ளன.

ராபர்ட் புரூஸ், நயினார் நாகேந்திரன், ஜான்சிராணி
ரோகித்தை அவமரியாதை செய்த ஹர்திக்.. 12 முறை எழுந்த எதிர்ப்பு குரல்! MI-ஐ வீழ்த்தி GT அசத்தல் வெற்றி!

வேட்பாளர்கள் யார்? யார்?

சிம்லா முத்துச்சோழன்
சிம்லா முத்துச்சோழன் PT WEB

வரும் மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டிருந்தார். அதிமுகவில் அவர் இணைந்து இரு வாரங்களுக்குள் அவருக்கு சீட் வழங்கப்பட்டது. அதேசமயத்தில் அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் என்பதால் கட்சிக்குள்ளேயே அதிருப்தி கிளம்பியது. இதனால் அவர் மாற்றப்பட்டு ஜான்சி ராணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையை பொறுத்தவரையில், ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட முயற்சி செய்வது வருகிறார். ஆனால், ஏற்கனவே மணிசங்கர் ஐயர் முன்பு எம்.பி.யாக இருந்ததை சுட்டிக்காட்டும் காங்கிரஸ் நிர்வாகிகள், மண்ணின் மைந்தர்களுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர். மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர், மீரா ஹுசைன், ஹசீனா சைய்யது ஆகியோரது பெயர்களும் பேசப்படுகின்றன. இந்நிலையில் இன்று இரவுக்குள் மயிலாடுதுறைக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராபர்ட் புரூஸ், நயினார் நாகேந்திரன், ஜான்சிராணி
ELECTION BREAKING: BJPயில் இணைந்த EX Cong MPக்கு உடனே சீட் To பாஜகவில் கங்கனா வேட்பாளராக அறிவிப்பு

நெல்லைக்கு மட்டும் அவசரமாக அறிவிப்பு ஏன்?

இரண்டு தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருந்த நிலையில், அதில் ஒன்றுக்கு மட்டும் ஏன் அவசரமாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார் என்ற கேள்வி எழலாம். அதற்கு காரணம், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை நெல்லையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறது. வேட்பாளர் யார் என்றே தெரியாமல் எப்படி வாக்கு சேகரிக்க முடியும் என்ற கேள்வி இருந்தது. அதனால், பரப்புரை கூட்டத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பு வேட்பாளரை அறிவித்திருக்கிறது காங்கிரஸ். ஒரு டி20 போட்டிக்கே உண்டான பரபரப்புடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com