வேலூர்|பகலில் கொளுத்தும் வெயில்.. இரவில் வெளுத்து வாங்கும் மழை.. என்ன காரணம்?
வேலூரில் பகல் நேரங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழலில் , இரவில் விட்டு விட்டு மழையும் பெய்து வருகிறது. மாறி மாறி வரும் காலநிலை கண்டு குழப்பமடைந்த மக்களின் ஐயத்தைத் தீர்க்கும் வகையில் பேரிடர் மேலாண்மை பேராசிரியர் விளக்கமளித்துள்ளார்.
ஆண்டு முழுவதும் வெயில் அதிகமாக இருக்கும் வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. மறு புறம், இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் 111 டிகிரி ஃபாரன் ஹீட் வரை வெப்பம் உள்ள சூழலில், இரவில் மழை பெய்வதால் 80 டிகிரி ஃபாரன் ஹீட்டாக வெப்பம் குறைகிறது.
இதனால் வேலூர் மக்கள் இரு வேறு சீதோஷ்ண நிலைகளை ஒரே நாளில் அனுபவித்து வருகின்றனர். வெப்ப மண்டலப் பகுதியான வேலூர் மாவட்டத்தில், பகலில் நிலவும் அதிகப்படியான வெப்பம் காரணமாக மேகங்கள் குளிர்ச்சியடைவது கடினம் என பேரிடர் மேலாண்மை பேராசிரியர் கணபதி விளக்கமளித்துள்ளார்.
அதிக வெப்பச்சலனம் காரணமாகவே இரவு நேரத்தில் மழை பெய்வதாகத் தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் தெரிவிக்கையில், “பகலில் சூரிய ஒளிக்கற்றைகள் அதிகம் படும்போது பூமி வெப்பமயமாகும்.சூரிய ஒளிக்கற்றைகளால் பகலில் குளிர்விப்பதற்கான வாய்ப்பு குறைவு. ஆகவே, இரவு வெப்ப அலைகள் குறைந்ததும் மழைப்பொழிகிறது.” என்று தெரிவித்துள்ளார்.