
போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் மாணவர்கள் சிலர் படியில் நின்றபடி பயணித்தனர். அந்தப் பேருந்தை வழிமறித்த ரஞ்சனா, படியில் நின்றிருந்த பள்ளி, கல்லூரி மாணவர்களை அடித்து கீழே இறங்க செய்தார். மாணவர்களை திட்டுவதாக கூறி தேவையற்ற வார்த்தைகளையும் உபயோகித்தார். தொடர்ந்து பேருந்து ஓட்டுநருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திரைப்பட துணை நடிகையான அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் மாங்காடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை வீட்டிற்கு சென்று காவல்துறையினர் கைது செய்தனர். பிடிவாரண்ட் மற்றும் எப்.ஐ. ஆர். நகல்களை கேட்டு காவல்துறையினருடன் ரஞ்சனா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் வீட்டு முன் பாஜக நிர்வாகிகளும் குவிந்ததால், அங்கு அசாதாரண சூழல் உருவாகியது. பலத்த பாதுகாப்புடன் ரஞ்சனா நாச்சியாரை காவல்துறையினர் கைதுசெய்து பூவிருந்தவல்லி மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.