ராமநாதபுரம்: 8 வருடமாக இடிந்துவிழும் நிலையிலுள்ள தினைகுளம் துணை சுகாதார நிலையம்

ராமநாதபுரம்: 8 வருடமாக இடிந்துவிழும் நிலையிலுள்ள தினைகுளம் துணை சுகாதார நிலையம்

ராமநாதபுரம்: 8 வருடமாக இடிந்துவிழும் நிலையிலுள்ள தினைகுளம் துணை சுகாதார நிலையம்
Published on

ராமநாதபுரம் அருகே சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள துணை சுகாதார நிலையத்தினால் சிகிச்சை பெற முடியாமல் கிராம மக்கள் பரிதவித்துவருகின்றனர். கட்டிடத்தின் நிலையை கருத்தில் கொண்டு, அந்த சுகாதார நிலையத்தை சேர்ந்த செவிலியர்கள் தெரு ஓரங்களில் உள்ள மரத்தடியில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் ஒன்றை கட்டித்தர பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைகுளம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. இந்த துணை சுகாதார நிலையத்தில் தினைகுளம், முத்திவலசை, பஞ்சங்தாங்கி, மோங்கான் வலசை, வேதகரைவலசை, வேதலோடை, களிமண்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்றுவரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக துணை சுகாதார நிலையம் கட்டடம் சேதம் அடைந்து மேற்கூரை பெயர்ந்து விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்துவருகிறது. அங்கு சென்று செவிலியர்கள் தங்கி பணியாற்ற முடியாத சூழ்நிலையும் இதனால் ஏற்பட்டுள்ளது. செவிலியர்களால் இருக்கமுடியாத காரணத்தால் விஷக்கடி சிகிச்சைக்காக அங்கு சிகிச்சைக்கு வரும் மக்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் அவசர தேவைக்காக சிகிச்சை பெற வேண்டும் என்றால் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ராமநாதபுரத்திற்கு செல்லவேண்டிய உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அவ்வப்போது கிராமத்திற்கு வரும் செவிலியர் தெருவோரங்களில் உள்ள மரத்தடியில் இருந்து கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த துணை சுகாதார நிலையத்தை இடித்து புதிதாக துணை சுகாதார நிலையம் கட்டி கொடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com