ராமஜெயம் கொலை வழக்கு
ராமஜெயம் கொலை வழக்குஎக்ஸ்

தூசி தட்டப்படும் ராமஜெயம் கொலை வழக்கு | விசாரணையில் டிஐஜி வருண்குமார்; உண்மை வெளிச்சத்துக்கு வருமா ?

தூசு தட்டப்படும் அமைச்சர் கே.என். நேரு-வின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு 13 ஆண்டுகால மர்மம் வெளிச்சத்துக்கு வருமா? நேரடி விசாரணையில் டிஐஜி வருண்குமார்.
Published on

13 ஆண்டுகளாகத் தீராத மர்மம் — ராமஜெயம் கொலை வழக்கு

தமிழகத்தின் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலைசெய்யப்பட்டார். அவரது சடலம் காவிரி ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டது.

ராமஜெயம் கொலை சம்பவமானது தமிழகம் முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக்கொலை சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தற்போது வரை கொலை குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை; கொலைகாண காரணமும் வெளிவரவில்லை!

ராமஜெயம் கொலை செய்யப்பட்டபோது
ராமஜெயம் கொலை செய்யப்பட்டபோது

பல்வேறு சர்ச்சைகளையும் பல்வேறு சந்தேகங்களையும் தற்போது வரை கிளப்பிக் கொண்டிருக்கும் ராமஜெயம் கொலை வழக்கின் குற்றவாளிகளை கண்டறிவதிலும், கொலைக்கான பின்னணி குறித்தும் கடந்த 13 ஆண்டுகளாக போலீசார் தீவிர விசாரணை செய்தும் வழக்கில் துப்பு துலக்க முடியாமல், வழக்கு ஆமை வேகத்தை விட பன்மடங்கு மெதுவாக நகர்கிறது.

1100 பேருக்கு மேல் விசாரணை — ஆயிரக்கணக்கான செல்போன்கள் ஆய்வு

இந்த கொலை குறித்து பல்வேறு விவாதங்களும் கேள்விகளும் எழ, கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை இந்த வழக்கில் 1100 பேருக்கும் மேல் விசாரிக்கப்பட்டு இருப்பதாகவும், 290க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆயிரக்கணக்கான செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் ராமஜெயம் தொடர்புடைய நபர்கள் அளித்த வாக்கு மூலத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல் இருந்ததாகவும் சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

சந்தேகப்பட்டியல் நபர்களைத் தவிர குற்றவாளிகள் நிழலைக்கூட தற்போது வரை தமிழக காவல்துறையால் நெருங்க முடியவில்லை என்பதே 13 ஆண்டு கால போலீசார் விசாரணைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

ராமஜெயம் கொலை வழக்கு
குழந்தை பிறப்பில் தொடர்ந்து சரியும் தமிழகம்.. அச்சம் தரும் புள்ளி விவரம்!

சிறப்பு குழுவின் விசாரணை — பல முறை அதிகாரிகள் மாற்றம்

இந்த நிலையில் தான், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் சிறப்புக் குழு ஒன்றை அமைத்து அதன் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி எஸ்.பி.,ஆக இருந்த ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனாலும் வழக்கு தொய்வை தவிர வேறொன்றையும் சந்திக்கவில்லை.

தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பாக விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் மாற்றப்பட்டு அப்போதைய திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார், தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராம் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

ரவுடி குணசீலன் மீது புதிய விசாரணை சுழல்

இதனத்தொடர்ந்து, திருச்சி சரக்க டிஐஜி வருண்குமார் ஐ.பி.எஸ் சில தினங்களுக்கு முன்பாக சிபிசிஐடி டி.ஐ.ஜி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் உறங்கிக் கொண்டிருந்த ராமஜெயம் கொலை வழக்கை மீண்டும் தூசு தட் ஆரம்பித்துள்ளார் சிபிசிஐடி டி.ஐ.ஜி வருண்குமார்.

கடந்த 13 ம் தேதி டி.ஐ.ஜி வருண்குமாா் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீசார், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனைக் கைதியான திருச்சி மண்ணச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த ரவுடி குணா (எ) மண்ணச்சநல்லூா் குணசீலன் (44) என்பவரிடம் திடீர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராமஜெயம் கொலை வழக்கு
’ஒரே பாணியில் இரண்டு கொலை?’ ஜெயக்குமாரின் மரணத்தில் தொடர்புடைய ராமஜெயம் கொலை சம்பவம்! ஷாக் தகவல்!

பாளையங்கோட்டை சிறையில் சுடலைமுத்துவிடம் 3 மணி நேர விசாரணை

ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடி குணசீலன் (எ) குணா ஏற்கெனவே காவல் துறையின் சந்தேகப்பட்டியலில் இருந்து வருகிறார். திருச்சி பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு 3 நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2019-இல் நீதிமன்றம், குணசீலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இந்த தண்டனையை முதலில் திருச்சி மத்திய சிறையில் அனுபவித்து வந்த குணசீலன், கடந்த 2021-இல் புழல் சிறைக்கு மாற்றப்பட்டாா். அவா் மீது 5 கொலை வழக்குகள் உள்பட 23 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஏற்கனவே ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேக பட்டியலில் இருந்து வரும் ரவுடி குணசீலனிடம் டி.ஐ.ஜி வருண்குமார் நேரடியாக புழல் சிறைக்கு சென்று சுமார் 3:30 மணி நேரம் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோல, அண்மையில் பாளையங்கோட்டை சிறையில் தண்டனை கைதியாக, தண்டனை அனுபவித்து வரும் ரவுடி சுடலைமுத்து என்பவரிடமும் டிஐஜி வருண்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டிஐஜி வருண்குமார்
டிஐஜி வருண்குமார்pt web

மீண்டும் தீவிரமாகிறது போலீஸ் விசாரணை!

கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைதாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் சுடலைமுத்து, திருச்சியில் ராமஜெயம் கொலை நடந்த சமயத்தில் தன்னோடு இருந்த மற்றொரு கைதியிடம் செல்போனில் கொலை சம்பவம் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியானது. அதன் அடிப்படையில் தொடர்ந்து ராமஜெயம் கொலை வழக்கில் சுடலைமுத்துவும் சந்தேக பட்டியலில் இருந்து வருகிறார். இதன் அடிப்படையில் தான் அண்மையில் டிஐஜி வருண்குமார் தலைமையிலான போலீசார் பாளையங்கோட்டை சிறைக்குச் சென்று அங்கு தண்டனை கைதியான சுடலை முத்துவிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

நீண்ட நாளாக குற்றவாளியை தொட முடியாத ராமஜெயம் கொலை வழக்கை மீண்டும் தூசி தட்ட ஆரம்பித்திருக்கிறார் சிறப்பு குழுவின் விசாரணை அதிகாரியும் சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ். அதன் ஒரு கட்டமாக புழல் சிறையிலும் பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளார்.

ராமஜெயம் கொலை வழக்கு
”‘சாதி பெருமை பேசுகிறார்; அது தப்பு.. கவின் கொலை குறித்தும்..” - இன்ஸ்டா திவாகர் மீது ஷகிலா புகார்!

குற்றவாளிகள் பிடிபடுவார்களா? — எழும் கேள்விகள்

சுமார் 13 ஆண்டு காலமாக குற்றவாளிகள் எங்கு உள்ளனர்? கொலைக்கான பின்னணி காரணம் என்ன? என்பது தெரியாமல் இந்த வழக்கு இருட்டில் இருந்து வரும், நிலையில் தற்போது விசாரணையானது தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கொலைக்கான காரணம் தெரிய வருமா? அல்லது இந்த விசாரணையும் 13 ஆண்டு காலமாக கிணற்றில் போடப்பட்ட கல் போல காணாமல் போகுமா? என சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com