“ஆளுநர் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றார்; ஆனால்....” ராஜ்பவன் விளக்கம்

“ஆளுநர் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றார். சட்டப்பேரவைத் தலைவர் விமர்சனத்தை வெளிப்படுத்திய நிலையில் ஆளுநர் பதவியின் கண்ணியத்தையும், சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்” ஆளுநர் மாளிகை
 தேசிய கீதம் புறக்கணிப்பு: ஆளுநர் ரவி
தேசிய கீதம் புறக்கணிப்பு: ஆளுநர் ரவிpt web

நேற்று காலை நடைப்பெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் தனது உரையை 2 நிமிடங்களிலேயே முடித்துவிட்டு அவையை விட்டு வெளியேறினார். இந்நிலையில் “ஆளுநர் உரை தொடர்பாக அவர் அளித்த அறிவுரையை தமிழ்நாடு அரசுதான் புறக்கணித்து விட்டது” என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும் “ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விமர்சனத்தை வெளிப்படுத்தியதால், ஆளுநர் தனது பதவியின் கண்ணியத்தையும், சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசிடமிருந்து பெறப்பட்ட வரைவு ஆளுநர் உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் பல பத்திகளில் இடம்பெற்றிருந்தன. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் மற்றும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், முடிவிலும் அதை இசைத்திடவேண்டும் என்று முதலமைச்சருக்கும் சட்டப்பேரவைத் தலைவருக்கும் ஆளுநர் கடந்த காலங்களில் கடிதங்களை எழுதி இருந்தார்.

ஆளுநரின் உரை என்பது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை பிரதிபலிக்கவேண்டும் மற்றும் சட்டமன்றம் கூடுவதற்கான காரணங்களை சட்டமன்றத்திற்கு தெரிவிக்கவேண்டும். இதைத் தவிர்த்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதற்கும், பாகுபாடான அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதற்காகவும் இருக்கக்கூடாது.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவிpt web

ஆளுநர் அளித்த அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் முதல் பத்தியை அவர் படித்தார். அதன் பின் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பல பத்திகளில் இடம்பெற்றிருந்ததை கருத்தில் கொண்டு அரசியலமைப்பை கேலிக்குரியதாக்கிவிடும் என்ற காரணத்தால் உரையை முழுமையாக படிக்க இயலாமைக்கான விளக்கத்தை ஆளுநர் தெரிவித்தார். சட்டப்பேரவைக்கு தனது மரியாதையை வெளிப்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக இந்த பேரவை கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து தனது உரையை முடித்தார்.

இதன்பிறகு ஆளுநரின் முழு உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் வாசித்தபோது உரை முடியும் வரை அமர்ந்திருந்தார். ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் வாசித்து முடித்ததும், நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஆளுநர் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றார். ஆனால் சட்டப்பேரவைத் தலைவர் ஆளுநருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து மற்ற கருத்துகளோடு நாதுராம் கோட்சேவை பின்பற்றுபவர் எனவும் தெரிவித்தார். சட்டப்பேரவைத்தலைவர் தனது பொருத்தமற்ற நடவடிக்கையால் தனது பதவியின் கண்ணியத்தையும், சபையின் மாண்பையும் குறைத்துவிட்டார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவுபுதிய தலைமுறை

ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவைத் தலைவர் நீண்ட விமர்சனத்தை வெளிப்படுத்திய நிலையில் ஆளுநர் தனது பதவியின் கண்ணியத்தையும் சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்” என ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com