ராஜபாளையம் | நிற்காமல் சென்ற அரசு பேருந்து – பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என மாணவர்கள் வேதனை
செய்தியாளர்: K.கருப்பஞானியார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புனல்வேலி கிராமத்தில் 500 குடும்பங்களை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுமார் 5 கிமீ தூரத்திற்கு அப்பால் உள்ள தளவாய்புரம் மற்றும் முகவூர் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். பேருந்தில் செல்வதற்காக மாணவ மாணவிகளுக்கு இலவச பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளி நேரத்தில் மீனாட்சிபுரத்தில் இருந்து, தளவாய்புரம் செல்லும் அரசு பேருந்து புனல்வேலி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது தொடர்கதை என புகார் எழுந்துள்ளது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள் வேறு வழியின்றி அதிக தொகை கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். வசதி குறைந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மாணவ மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படுவதால் புனல்வேலி நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டு மாணவ, மாணவிகள் தடையின்றி பள்ளிக்குச் செல்ல போக்குவரத்து துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ராஜபாளையம் போக்குவரத்து கழக மேலாளர் மாரிமுத்துவிடம் கேட்டபோது, இனி இதுபோன்று தவறு நடக்காது எனவும், பேருந்து நிறுத்தப்பட்டு பள்ளி மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.