"அண்ணா - ராஜாஜி போல.. NDA கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்” - தமிழிசை அழைப்பு!
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி வியூகம் முக்கியம் என்பதை நினைவூட்டிய பாஜக தலைவர் தமிழிசை, விஜய்யை என்.டி.ஏ கூட்டணியில் இணைய அழைத்துள்ளார். திமுகவின் பலத்தை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அண்ணா மற்றும் ராஜாஜி கூட்டணியின் வரலாற்றை எடுத்துக்காட்டி, இது வலுவான கூட்டணியாக பார்க்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
சுதந்திரத்திற்கு பின் தமிழ்நாட்டில் "தேர்தல் கூட்டணி" என்ற கணக்கை முதன்முதலில் தொடங்கி வைத்தவர் அண்ணா. 1967இல் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கிற்காக, தனது பரம எதிரியாகக் கருதப்பட்ட ராஜாஜியுடன் கைகோர்த்தார் அண்ணா. காங்கிரஸில் இருந்து பிரிந்து 1959இல் சுதந்திரா என்ற தனிக் கட்சியை தொடங்கிய ராஜாஜி, காங்கிரஸை வீழ்த்த கங்கணம் கட்டியிருந்தார். அந்த நேரத்தில்தான் காங்கிரஸை வீழ்த்த ராஜாஜியுடன் கைக்கோர்த்தது அண்ணா தலைமையிலான திமுக. "பிராமண எதிர்ப்பு" பேசிய திமுகவும், "திமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள்" என்று சொன்ன ராஜாஜியும் இணைந்த அந்தப் புள்ளிதான், சுதந்திரத்திற்குப்பின், கொள்கையை கடந்து தமிழகத்தில் உருவான முதல் தேர்தல் கூட்டணி.
இன்று அதே அண்ணாவின் தேர்தல் கூட்டணி வியூகத்தை கையில் எடுத்துக்கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். திமுக எனும் பலமான சக்தியை வீழ்த்த வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கக் கூடாது என கூறி விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளார் தமிழிசை. ராஜாஜியுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்த போதிலும், "ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால், நாம் ஏன் ராஜினாமா செய்யக் கூடாது?" என்று கேட்டவர் அண்ணா.
ஆகையால், ராஜாஜியுடன் அன்று அண்ணா அமைத்த கூட்டணி, தேர்தலுக்கான சந்தர்ப்பவாத கூட்டணியாகப் பார்க்கப்படவில்லை, அது வலுவான கூட்டணியாகவே பார்க்கப்பட்டதாக கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். "கொள்கை என்பது இடுப்பில் கட்டும் வேட்டி; பதவி என்பது மேலே அணியும் துண்டு, பதவிக்காக இடுப்பில் கட்டிய வேட்டியை நாம் இழக்கக் கூடாது" என்ற அண்ணாவின் பொன்மொழியையும் அரசியல் நோக்கர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்

