‘நயினார் அடிப்படை அறிவைக்கூட இழந்துவிட்டார்..’ விஜயை மோசமாக விமர்சித்ததற்கு நாஞ்சில் பதிலடி!
நயினார் நாகேந்திரன், விஜயை தரக்குறைவாக விமர்சித்ததற்கு நாஞ்சில் சம்பத் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். நயினார் அடிப்படை அரசியல் கண்ணியத்தை இழந்துவிட்டார் என அவர் குற்றம்சாட்டினார். மேலும், நயினார் முதலில் தனது குறைகளை சரி செய்ய வேண்டும் எனவும், விஜயின் அரசியல் திறமையை மதிக்க வேண்டும் எனவும் கூறினார்.
சேலம், சீலநாயக்கன்பட்டி தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், எதிர்க்கட்சிகளுக்கு சவால் விட்டுள்ளார். ”என்னை மாதிரி சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் ஓட்டு வாங்கி காட்டும் தில்லு அவர்களுக்கு இருக்கிறதா? திராணி இருக்கிறதா” என அவர் சவால் விட்டு பேசினார்.
அதற்கு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த நயினார் நாகேந்திரன், ”பாவம் விஜய் அனுபவமே இல்லாதவர், முதலில் அவர் வீட்டில் இருந்து வெளியே வரட்டும், திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும். குடும்பத்தோடு நல்ல உறவு வைக்க வேண்டும், நல்ல தலைவர்கள் வழி நடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்ல வேண்டும், வீட்டிலிருந்து வெளியே அவர் வரவேண்டும்” என தரக்குறைவாக விமர்சித்து பேசினார்.
அடிப்படை அறிவைக்கூட இழந்துவிட்டார்..
விஜயை திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும் என தரக்குறைவாக விமர்சித்திருந்த நயினார் நாகேந்திரனுக்கு நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்.
அதுகுறித்து பேசியிருக்கும் தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத், “ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார்.
எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்; முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது” என பதிலடி கொடுத்துள்ளார்.

