ராஜ் பவன் பெயர் விவகாரம்.. ஸ்டாலின் எதிர்ப்பு.. திருமா ஆதரவு!
ஆளுநர் மாளிகையான ’ராஜ் பவனி’ன் பெயரை ’லோக் பவன்’ என பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பின்படி, தமிழகத்திலுள்ள ராஜ்பவனின் பெயர் தமிழில், ’மக்கள் மாளிகை’ என மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் மாளிகையான ’ராஜ் பவனி’ன் பெயரை ’லோக் பவன்’ என பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், ’ராஜ் பவன்’ என்ற பெயரை ’லோக்பவன்’ என்றும், ’ராஜ் நிவாஸ்’ என்ற பெயரை ’லோக் நிவாஸ்’ என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
’ராஜ் பவன்’ என்ற பெயரை ’லோக் பவன்’ என பெயர் மாற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி கோரிக்கை வைத்திருந்ததாகவும் அதனை ஏற்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகவும் அவரது ஆலோசகர் திருஞான சம்பந்தம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்பின்படி, தமிழகத்திலுள்ள ராஜ்பவனின் பெயர் தமிழில், ’மக்கள் மாளிகை’ என மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தப் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவர், “பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை” எனத் தெரிவித்துள்ள முதல்வர், ”சட்டமன்றத்தை மதிக்காதவர்கள் மக்கள் மாளிகை என பெயர் மாற்றுவது கண் துடைப்பா என்றும் மக்களாட்சி தத்துவத்தின் கண்களில் மண்ணை தூவுவதற்காகவா” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் தற்போதைய தேவை” எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ”சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், ஆளுநர் மாளிகையின் பெயர் மாற்றம் தேவையற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்றுள்ளார். அவர், ”ஆளுநர் மாளிகைக்கு இதுவரையில் ராஜ் பவன் என்று இருந்த பெயரை, இப்போது லோக் பவன் என பெயர் மாற்றம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவன், கொடிமர மாளிகை மற்றும் டார்ஜிலிங் இல்லம் ஆகியவற்றை லோக் பவன் என மறுபெயரிடுவதற்கான மத்திய அரசின் உத்தரவை மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் அமல்படுத்தியுள்ளார்.

