திருவள்ளுவரை, ஷேக்ஸ்பியர் போன்றவர்களுடன் ஒப்பிட்டு பேசும்போது... - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
திருவள்ளுவரை ஷேக்ஸ்பியர் போன்றோருடன் ஒப்பிடுவது சூரியனை சாதாரண விளக்குடன் ஒப்பிடுவதற்குச் சமம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை ராஜ்பவனில் தமிழ் ஆளுமைகளுடன் எண்ணித் துணிக என்ற தலைப்பில் ஆளுநர் கலைந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், " தமிழ் தான் பழமை வாய்ந்த மொழி. இலக்கண இலக்கியத்தில் தொன்மை வாய்ந்த மொழி. ஆங்கிலேயர்கள் நம்முடைய கல்வி அமைப்பு , தொழில் நிறுவனங்கள், விவசாயம் உள்ளிட்டவற்றை அழித்தனர். தொழிற்சாலைகளில் மட்டுமே, ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கினர். தாய் மொழி பேசினால் தாழ்வு மனப்பான்மை என்பது போன்ற உணர்வை ஏற்படுத்தினர். ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே நீங்கள் படித்தவர்கள் என்ற ஒரு நிலை உருவானது. திருவள்ளுவரை, ஷேக்ஸ்பியர் போன்றவர்களுடன் ஒப்பிட்டு பேசும்போது, எனக்கு மிகவும் கோபம் வருகிறது. திருவள்ளுவரை ஷேக்ஸ்பியர் போன்றோருடன் ஒப்பிடுவது சூரியனை சாதாரண விளக்குடன் ஒப்பிடுவதற்குச் சமம்.
ஆங்கிலேயர்கள் கலாசாரம், 300 அல்லது 400 ஆண்டுகள் மட்டுமே பழமையானது. அப்படி இருக்கையில், நம்முடைய ஆளுமைகளை அவர்களுடன் ஒப்பிடுவது தவறு. தமிழ் மொழி செம்மை அடைய பாரதியார் உள்ளிட்ட பலர், தமிழ் மொழிக்காக தொண்டாற்றினர். பல நுாறு ஆண்டுகளுக்கு பிறகும், நாம் பாரதியாரை விட்டு விடக்கூடாது. பல்லாயிரம் கனவு கண்டவர் பாரதி." என்று பேசினார்.