“தொடங்கும்முன் கொல்லப்படும் விசாரணை” - பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஆளுநர் மாளிகை அதிருப்தி!

நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது என ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசியவர் குறித்தான விசாரணை தொடர்பாக ராஜ்பவன் விமர்சித்துள்ளது.
ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகைpt web

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற ரவுடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். கைதான கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். அரசு அலுவலகம் மீது குண்டு வீசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினரின் முதல்கட்ட தகவல் அறிக்கையில், ரவுடி வினோத் வீசிய பெட்ரோல் குண்டு அதிக சத்தத்துடன் எரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகைpt web

குண்டுவீசி விட்டு தப்பி ஓடும் சமயத்தில் பிடிப்பதற்காக விரட்டிய போது, ரவுடி வினோத், காவல் துறையினர் மீது மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் காவல்துறை எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான ரவுடி வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இத்தகைய சூழலில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சிங்கா மற்றும் துணை ஆணையர் பொன் கார்த்திக் ஆகியோர் நேற்று நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரிடம் அவர்கள் விளக்கம் அளித்தனர். அதே சமயத்தில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

RajBhavan | Chennai | Guindy | PetrolBomb | RNRavi
RajBhavan | Chennai | Guindy | PetrolBomb | RNRavi

இந்நிலையில் ராஜ்பவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது. அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது.

நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com