
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவனியாபுரம் வந்தடைந்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை அவரும் உதயநிதியும் அருகருகே அமர்ந்து ரசித்தனர்.
மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்க்க காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று மதியம் 12 மணியளவில் அவர் நிகழ்விடத்திற்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டபடி, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்க்க அவனியாபுரம் வந்துள்ளார் ராகுல் காந்தி.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த ராகுலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மதுரை விமான நிலையத்திலிருந்து கப்பலூர் வழியாக காரில் அவனியாபுரம் வந்தடைந்தார். ’மதுரைக்கு வருகை தந்துள்ள ராகுல் காந்தி அவர்களை வருக வருகவென வரவேற்கிறோம்’ என்று பொதுமக்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், ஏற்கெனவே அங்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ரசித்து வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியுடன் அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசிக்க ஆரம்பித்தார்.