இசைஞானி இளையராஜாவின் இசையில் திவ்யபாசுரங்கள்.. கலையுலக வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்!

கிருஷ்ணகான சபாவில் நடைப்பெற்ற நாலாயிரதிவ்ய பிரபந்தம் இசை தட்டு வெளியீட்டு விழா
இசை வெளியீட்டு விழா
இசை வெளியீட்டு விழாபுதியதலைமுறை

திநகர் கிருஷ்ணகான சபாவில், இசைஞானி இளையராஜாவின், திவ்யபாசுர இசைதட்டு வெளியீடு விழா சமீபத்தில் நடந்தது.

நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் சில பாசுரங்களை தேர்ந்தெடுத்து அதற்கு இசைவடிவம் கொடுத்து ’திவ்ய பாசுரம்' என்ற பெயரில் இசைத்தட்டாக வெளியிட்டார் இசைஞானி இளையராஜா.

இந்த நாலாயிர திவ்ய பிரபந்தம் நமக்கு எப்படி கிடைத்தது?

ஆழ்வார்கள் இயற்றிய பல பாடல்கள் நாளடைவில் மறைந்து வந்த நிலையில் நாதமுனி என்ற திருவரங்கநாதமுனிகள், ஆழ்வார்களின் சில பாடல்களை சேகரித்து ஒரு நூலாக தொகுத்து, நாலாயிர திவ்ய பிரபந்தத்தை வழங்கினார்.

யார் இந்த நாதமுனி என்பதையும் பார்த்துவிடலாம்.

நாதமுனிகள் கிபி 824 ம் வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் வீரநாராயணபுரம் என்னும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் பிறந்தவர்.

இவர் சிறு வயது முதல், யோகவித்தை, தேவ கான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் இவரை திருவரங்கநாதமுனிகள் என்று அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று..

காட்டு மன்னார் கோயிலில் நாதமுனிகள் இருந்த போது வைணவ அடியார்கள் சிலர் கோயிலுக்கு வந்து சில பாடல்களைப்பாடி பெருமாளை கும்பிட்டு வந்தனர். அடியார்கள் பாடிய பாடல்கள் புதிதாக இருந்ததால், அவர்களிடம், இப்பாடல் யார் இயற்றியது? என்று கேட்ட பொழுது, அவர்கள் நம்மாழ்வாரின் பாடல் இது... என்றும் “ஆராஅமுதே அடியேன் உடலம்”மற்றும், “குருகூர்ச் சடகோபன், குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்” என்ற அடிகளைக் கேட்ட நாதமுனிகள் அடியார்களிடம் ,”அந்த ஆயிரம் பாடல்கள் பற்றி சொல்ல இயலுமா?”என ஆர்வமாகக் கேட்டார்.

அவர்களோ ”அத்தனை பாடல்களும் எங்களுக்கு தெரியாது பத்துப் பாசுரங்கள் மட்டுமே தெரியும் , ஆனால்... ஆயிரம் பாசுரங்களும் குருகூரில் மதுரகவிகள் வழி வந்த பராங்குச தாசருக்கு தெரியும் “என்றும் கூறினர்.

நாதமுனிகளும் குருகூருக்குச் சென்று பராங்குச தாசரிடம் விசாரித்தார். அவரும் சில பாசுரங்களை அவருக்கு சொன்னார். இப்படி பல வழிகளில் பாசுரங்களைப்பெற்று அவற்றை ஒன்றாக்கி திவ்யபிரபந்தமாக உருவாக்கினார்.

தான் பெற்ற புதையலை அனைவரும் அறியச் செய்தார். பிரபந்த பாடல்களை இனிய இராகம், தாளம் அமைத்தும், அதற்கேற்ற அபிநயம் பிடித்தும் இறைவன் முன் ஆடினார்.. இதுவே தற்பொழுது வைணவத் தளங்களில் பாடப்பட்டு வரும் பாசுரம் ஆகும்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் சில பாடல்களை தற்கால இசையமைப்புடன், இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் புதிய இசையிட்டு, புதிய ராகத்தில் இசைத்தட்டாக வெளியீடு செய்துள்ளார் இசைஞானி இளையராஜா..

இளையராஜாவைப்பற்றி ஆன்மீக உபன்யாசகரான திரு.உ.வே.வெங்கடேஷ் அவர்கள் பேசுகையில்,

ஒரு கவிதையானது பாடலாக இடம்பெற்றால்தான் மனதில் இடம்பிடிக்கும். பேச்சைவிட இசைக்கு சக்திஅதிகம், இசை என்பது நமது உணர்சி, இசையின் மூலமாக கடவுளை நாம் சுலபமாக அடையலாம். இசை ஒன்று தான் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும், இசைக்கு இசைபவன் இறைவன், வேதங்களுக்குள் இசைவடிவமாக இறைவனிருக்கிறான்.

இந்த திவ்யபிரபந்தத்திற்கு ஏன் இளையராஜா இசை அமைக்கவேண்டும் என்றால் ... இந்த பாசுரத்திற்கு இசை அமைக்க இசைஞானம் அர்பணிப்பு, ஆன்மீகபலம் இந்த மூன்றும் இவரிடம் இருப்பதால் இவர் இதற்கு இசை அமைப்பது சிறந்தது.” என்று கூறியவர், ”பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார்... பாட்டுக்கு நான் பாடுபட்டேன் அந்த பாட்டுகள் பலவிதம்தான் என்று அவரே சொல்லி உள்ளார்.”என்றார்

”இளையராஜா சிறந்த இசைஞானி,

இவர் இசையால் உலகமே அசைஞானி,

இசையில் ஊறிய தசைஞானி,

வாழ்வுக்கு திசை ஞானி,

பாட்டை உள்ளத்தில் பதியவைக்கும் பசை ஞானி,

பாட்டுடன் தெய்வீகத்தை பிசைஞானி,

உள்ளங்களை ஈர்க்கும் புவியீர்ப்புவிசை ஞானி ”என்று இளையராஜாவைப் புகழ்ந்ததும் இளையராஜாவின் முகத்தில் முத்துப்போல ஒரு சிறு புன்னகை மலர்ந்தது...

”திருவரங்கம் ராஜகோபுரத்திற்கு கைங்கர்யம் செய்தவர் இசை ஞானி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது” என்றார்.

வேதந்த வித்தகர் சின்ன ஜீயர் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.

"இளையராஜா தன் 82வது பிறந்த நாளை ஒட்டி ஹைதராபாத் ஸ்டாட்சு ஆஃப் ஈகுவாலிட்டி வந்திருந்தார். அப்போது அவர் அங்கே ராமாநுஜருக்கு பாடலை இசை மாலையாய் சூட்டினார். அங்குள்ளவர்கள் அந்த இசையில் மயங்கினார்கள். இன்றுவரை அந்தப் பாடலை பாடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த அளவுக்கு இசையைத் தன் உயிருக்கு உயிராக உருவாக்கிக் கொடுப்பவர் இளையராஜா. அவருக்கு நாங்கள் ’ராகவிருச்சி...’ அதாவது ’ராகபிரம்மா’ என்ற பட்டத்தைக்கொடுத்தோம். காரணம் அவர் இசையை உருவாக்குகிறார். உருவாக்குவது பிரம்மன் தானே? அதனால் இவருக்கு ’ராகபிரம்மா’ என்ற பட்டத்தை வழங்கினோம் என்றார்.

இளையராஜாவின் இசையில் இதுவரை பல ஆயிரம் பாடல்கள் வந்திருக்கலாம். ஆனால் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கும் இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானது. அடுத்த தலைமுறைக்கு ஆழ்வார்களின் பாசுரத்தைக் கொண்டு சேர்க்க உதவியுள்ளார். நம் சனாதன தர்மத்தைக் காக்கும் வகையில் இளையராஜா தொடர்ந்து இதுபோன்று இசைப்பணி ஆற்றிக்கொண்டிருப்பது அவசியம். அதற்காக அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்" என்று ஆசி வழங்கினார்.

இளையராஜாவின் பேச்சு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்ற பாடலுடன் தனது பேச்சை தொடங்கினார் இளையராஜா பேசினார். ”திருவாசகத்திற்கு பிறகு, எனது அடுத்த முயற்சி இந்த திவ்யபிரபந்தம். எப்பொழுது எது நடக்கவேண்டுமோ அது சரியாக நடந்துள்ளது. இந்த இசை வெளியீட்டு விழா வழக்கம் போல் விழாவாக இல்லாமல் திவ்ய பிரபந்தமாக நடந்தது எனக்கு மகிழ்ச்சி “ என்றார்.

இதையும் படிக்கலாம்:நாசா அனுப்பிய விண்கலத்தில் சிக்கல்;திட்டமிட்டபடி பூமிக்கு திரும்பமுடியாத நிலையில் சுனிதா வில்லியம்ஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com