திமுகவை சரமாரி கேள்வி கேட்ட விஜய்.. புள்ளி விவரத்துடன் முதல்வர் பதிலடி!
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்க்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணத்தை தொடங்கினார். முதற்கட்டமாக ஜெர்மனிக்கு சென்ற ஸ்டாலின் அங்கு, நடைபெற்ற ‘டிஎன் ரைசிங் ஜெர்மனி’ என்னும் முதலீட்டார்கள் மாநாட்டில் பங்கேற்றார்.
பின்னர், இங்கிலாந்து சென்ற அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தியிருந்தார். இந்த நிலையில், சென்னை திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு ரூபாய் 15,516 கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. மொத்தமாக 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் இருந்து, ஐரோப்பா முதலீட்டு சந்திப்புகளின்போது 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம், 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பை கணிசமாக மேம்படுத்த, இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட இந்துஜா குழுமத்துடன் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் Knorr Bremse நிறுவனத்துடன் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காற்றாலை உற்பத்தி நிறுவனமான Nordex குழுமத்துடன் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிலும், மின்மோட்டார், மின்விசிறி தயாரிப்பு நிறுவனமான ebm-papst நிறுவனத்துடன் 201 கோடி ரூபாய் முதலீட்டிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் 26 நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 7 ஆயிரத்து 20 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணங்கள் பற்றி விளக்கமளித்து காணொளி ஒன்றை தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ எனது வெளிநாட்டு பயணங்கள் பற்றியும், புதிதாக தொடங்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அரசியல் பற்றிய கேள்விகள் மக்களுடன் ஸ்டாலின் செயலியில் கேள்விகள் வந்துள்ளது. அதற்கான பதில்களை உங்களில் ஒருவன் பதில்கள் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் எனக் கூறினார்.
அதில், தற்போதைய வெளிநாடு சுற்றுப்பயணம் கேள்விக்கு, “ ஜெர்மனியில் முதலீட்டார்களை சந்தித்து தமிழ்நாட்டு கட்டமைப்புகள் பற்றியும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம் பற்றியும் விளக்கி சொன்னோம்(presentation) அதை பார்த்த அவர்கள் தமிழ்நாட்டை குறித்து வியந்து பாராட்டினார்கள். முதலீட்டார்கள் பேசும்போது இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை கொடுத்திருப்பதை பாராட்டினார்கள். எல்லா துறைகளையும் முக்கியத்துவம் அளிப்பதையும் பாராட்டினார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்வதற்காக ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்தது பற்றிய கேள்விக்கு, “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை திறந்த பிறகு எனக்கு மெய் சிலிர்த்தது. அங்கு இருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை பார்க்கும் போது, இட ஒதுக்கீட்டின் மூலமும், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் மூலமே என்னால் இவ்வளவு தூரம் வரை வர முடிந்தது எனக் கூறினர். இந்த மாதிரி பல மறக்க முடியாத தருணங்களை கொண்டதாக என்னுடைய ஐரோப்பிய பயணம் அமைந்தது எனக் கூறினார்.
இந்நிலையில், இன்று தேர்தல் பரப்புரையில் தவெக தலைவர் விஜய் முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து, வெளிநாட்டு பயணம் எதற்கு வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்கவா அல்லது வெளிநாடுகளில் முதலீடு செய்யவா என விமர்சனம் செய்திருந்தார்.
அவர் விமர்சித்த சில நிமிடங்களில் முதல்வர் ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து வீடியோ வெளியிட்டு பேசியிருந்தது, விஜயின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே அமைந்திருந்ததாக சொல்லப்படுகிறது.