தவெக பரப்புரை|நாகை சென்ற விஜய்.. வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
தவெக தலைவர் விஜய் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், விஜய் தற்போது நாகப்பட்டினம் வந்தடைந்தார்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கினார். முதற்கட்டமாக திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், அந்த பரப்புரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து. அன்று நடைபெறவிருந்த பெரம்பலூர் மாவட்ட பரப்புரை நேரமின்மை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தொடங்கவுள்ளார்.
இதற்காக, பரப்புரையில் ஈடுபடுவதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு தனிவிமானம் மூலம் சென்ற விஜய், அங்கிருந்த தவெக பரப்புரை வாகனம் மூலம் சாலை மார்க்கமாக நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டார். அப்போது, வழி நெடுக தொண்டர்கள் தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, நாகைக்குச் சென்ற விஜய், அங்கு இன்னும் சில நிமிடங்களில் பரப்புரையாற்ற உள்ளார்.
- சீ.பிரேம்குமார்