மண்ணை அலசி துகள்களை உருக்கி காசாக்கும் பூஜாலி என்ற வம்சத்தினர்!
திருவண்ணாமலை அருகே நகை கடை முன்பிருக்கும் மண்களை அள்ளி, அதை சேகரித்து அலசி ரசாயனம் மூலம் கலந்து கொதிக்க வைத்து, மீண்டும் அதை நகை கடையில் கொடுத்து, காசாக மாற்றி வாழ்க்கை நடத்தும் பூஜாலி என்ற வம்சத்தினர், அதையே தொழிலாக வைத்து செயல்படுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் நகை கடை முன்பு உள்ள மண்களை பெருக்கி வாரி அதை சேகரித்து, கழிவு நீர் கால்வாயில் சகஜமாக இறங்கி அமர்ந்து மண்ணை அலசி, அதிலிருந்து கிடைக்கும் துகள்களை ரசாயனமூலம் கலந்து கொதிக்க வைத்து, பாதரசம் மூலம் கழுவி அதிலிருந்து கிடைக்கும் துகள்களை நகை அடகு கடையில் கொடுத்து, அதிலிருந்து வரும் 400 முதல் 500 ரூபாய் வரை கிடைக்கும் சொற்பக் காசில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர் பூஜாலி என்ற வம்சத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக நகைக்கடை முன்பு உள்ள மண் துகள்களை சேகரித்து, அதை கழுவு நீரில் அலசி அதிலிருந்து வரும் துகள்களை உருக்கி காசாக்கி குடும்பம் நடத்தி பிழைத்து வருகின்றனர். தொழிலாக இதையே வைத்து பிழைத்து வரும் இவர்கள், மற்ற நேரங்களில் குப்பை பொறுக்குதல், கூலி வேலை செய்தல் என பல்வேறு வேலைகளை செய்வதாக கூறுகின்றனர்.
மேலும் சாக்கடை என்றாலே மூக்கை பொத்தி வாயை மூடி தூரம் ஓடும் சாமானியர்களுக்கு மத்தியில், பல்வேறு சகதிகள் செல்லும் கழிவு நீர் கால்வாயில் சகஜமாக இறங்கி அமர்ந்து மண்ணை அலசி ஆராய்ந்து துகள்களை சேகரித்து செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். மற்றும் அதனால் ஏற்படும் சருநோய்கள் உடல் பாதிப்புகளை பொருட்படுத்தாமல் இந்த தொழிலை செய்து வாழ்வது சகமனிதர்களிடத்தில் வேறுபாடு வாய்ந்ததாக உள்ளது.