புதுக்கோட்டை | தமிழ் வருடப் பிறப்பு - நல்லேர் பூட்டி உழவுப் பணிகளைத் தொடங்கிய விவசாயிகள்
செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
தமிழர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஏர் கலப்பைக்கு பூஜையிட்டு, உழவுப் பணிகளை தமிழ் ஆண்டின் முதல் நாளில் தொடங்குவதை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். அந்த பாரம்பரிய நிகழ்வின் அடிப்படையில் இன்று பிறந்துள்ள விசுவாவசு ஆண்டின் முதல் நாளான தமிழ் வருடப் பிறப்பன்று விவசாயிகள் உழவுப் பணியை தொடங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டார கிராமங்களான கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி, குளவாய்ப்பட்டி, மாங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் ஏர் கலப்பைகள் மற்றும் டிராக்டர்களுக்கு பூஜையிட்டு விவசாயப் பணிகளை தொடங்கினர்.
ஆடிப் பட்டத்திற்கு அறுவடை செய்யும் வகையில் இன்று உழவுப் பணிகளை உற்சாகமாகத் தொடங்கினர். கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தில் சுபக்குமார் என்ற விவசாயி, பாரம்பரியம் மாறாமல் குடும்பத்தினரோடு ஆண்டுதோறும் காளைகளைக் கொண்டு நல்லேர் பூட்டி வருகிறார்.
தொடக்கத்தில் கிராமத்தில் இருக்கும் அனைத்து விவசாயிகளும் நல்லேர் பூட்டி ஒன்றாக வழிபாடு நடத்தி, புத்தாண்டை வரவேற்ற நிலையில், மற்ற விவசாயிகள் வழக்கத்தை கைவிட்டு, ட்ராக்டர் உள்ளிட்ட சாதனங்களுக்கு மாறி விட்டனர். ஆனால் பாரம்பரியத்தை மாற்றாமல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நல்லேர் பூட்டி புத்தாண்டைக் வரவேற்று வருகிறார் விவசாயி சுபக்குமார்.