
சென்னை ராயபுரத்தை சேர்ந்த பத்திரிகையாளர் அரவிந்தாக்ஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர், “மே 5ஆம் தேதி (நாளை) தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆய்வுகளோ, அரசாங்க ரீதியிலான தகவல்கள் ஏதும் இல்லாமல், பொய்யான தகவல்களுடனும், மத ஒற்றுமையை குலைக்கும் வகையிலும், பொது அமைதிக்கு ஊறு விளைவித்து மக்களிடையே பிளவையும், வன்முறையையும் உருவாக்கும் வகையிலும் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கேரளாவைச் சேர்ந்த ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்ற கதாபாத்திரம், பாத்திமா பா என மதம் மாறி, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியாக உருவாகியுள்ளதாகவும் தன்னைபோல மதம் மாற்றப்பட்ட 32 ஆயிரம் பெண்கள் சிரியா, ஏமன் பாலைவனங்களில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் கூறுகிறது.
எனது 20 ஆண்டுகால பத்திரிகை துறை வாழ்க்கையில் இதுபோன்ற புள்ளி விவரங்கள் எதையும் உள்துறை அமைச்சகமோ, நுண்ணறிவு புலனாய்வு அமைப்புகளோ தெரிவிக்காத நிலையில், அதுபோன்ற தகவல்களை கொண்டு ‘உண்மை கதை’ எனக் கூறி சன்சைன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சுதிப்தோ சென் இயக்கியுள்ளார்.
மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்பு துறையிடம் படத்தில் கூறப்பட்ட புள்ளி விவரங்களை உறுதிபடுத்தாமல், படத்தை வெளியிடுவதற்கான சான்றிதழை வழங்கக் கூடாது என மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை ஆகியவற்றிடம் கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி புகார் அளித்தேன்.
போலவே இந்த படத்தில் கூறப்படும் தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்தக் கோரி கேரள முதலமைச்சர், தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தேன்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம், இந்தியாவில் கேரளா உட்பட இந்தியாவில் மாநில வாரியாக இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு விற்கப்பட்டவர்களின் விவரம், அவ்வாறு இந்தியாவிலிருந்து சென்ற இந்து பெண்களை உள்துறை அமைச்சகம் கண்காணிக்கிறதா போன்ற கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தேன். ஆனால், ‘காவல்துறை மற்றும் பொது அமைதி என்பது மாநில விவகாரம்’ என கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி பதிலளிக்கப்பட்டது.
இதன்மூலம் தி கேரளா ஸ்டோரி படத்தில் கூறப்பட்ட தகவல்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என நிரூபணம் ஆகியுள்ளது. படத்தின் டீசருக்கு சான்றிதழ் வழங்கவில்லை என தணிக்கை வாரியமே கூறியுள்ளது. ஆனால், சன்சைன் பிக்சர்ஸ் சட்டவிரோதமாக டீசரை வெளியிட்டுள்ளது. அதனால் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதை தடை செய்யக் கோரி தமிழக முதல்வர், தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு ஏப்ரல் 27ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளேன்.
இந்திய நுண்ணறிவு புலானாய்வு அமைப்புகளின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் மாநிலமாக கேரளாவை முன்னிறுத்தும் வகையிலும் தி கேரளா ஸ்டோரி படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 8 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்வதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. இந்தியாவை அவமானப்படுத்தும் வகையிலும், அமைதியை விரும்பும் இந்தியாவை, உலகிலேயே தீவிரவாதிகளை உருவாக்கும் நாடாக சித்தரிக்கும் வகையிலும் படம் உருவாகியுள்ளது. இது என்னை போல தேசத்தின் மீது பற்று கொண்ட பலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இதை பார்க்கையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான மனநிலையை நாட்டின் பெரும்பாலான மக்களின் மனதில் ஏற்படுத்துகின்றனரோ என்ற அச்சம் ஒரு பக்கம் இருக்கிறது. இந்திய இறையாண்மைக்கும், மக்களின் ஒற்றுமைக்கும் ஊறு விளைவித்து, நாட்டில் உள்ள பொது அமைதியை இப்படம் கெடுக்கும். எனவே, இந்தப் படத்தை வெளியிட முழுமையாக தடை விதிக்கக் கோரி மத்திய மாநில அரசுகள் மற்றும் திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கு அளித்த மனுக்களை பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.