‘தி கேரளா ஸ்டோரி’க்கு தடை கோரிய 2 மனுக்களும் தள்ளுபடி... உளவுத்துறை எச்சரிக்கை சொல்வதென்ன?

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
The Kerala Story
The Kerala StoryFile Image

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் இந்தியில் தயாராகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த திரைப்படம் வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதனையொட்டி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

அதில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தமைக்காக ஒரு இளம்பெண் கைது செய்யப்படுகிறார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். அப்போது, தான் யார் என்பதை அவர் சொல்வது போன்ற FLASH BACK காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. அதன்படி பிறப்பால் இந்துவான அந்தப் பெண்ணுக்கு, இஸ்லாமிய மாணவி ஒருவரால் இந்த நிலை ஏற்பட்டதாக காட்டப்படுகிறது.

இதன் பின்னணியில், ஒரு இஸ்லாமிய மாணவிக்கு தம்முடன் தங்கியிருப்பவர்களை மூளைச்சலவை செய்யும் ASSIGNMENT கொடுக்கப்படுகிறது. அவரோடு 4 இஸ்லாமிய இளைஞர்களும் இணைந்துகொள்கின்றனர். பிற மதக் கடவுளர்களை இஸ்லாமிய மாணவி விமர்சிக்கும் காட்சிகளும், ஹிஜாப் அணியும் பெண்களுக்கு எந்த ஆபத்தும் வராது என அவர் கூறும் வசனங்களும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாத்துக்கு மாறி அந்த மதத்தைச் சேர்ந்த இளைஞர்களை திருமணம் செய்துகொள்வது போன்றும், அதன்பிறகு அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவது போன்றும் காட்டப்படுகிறது.

இதுபோன்ற விவகாரமான உள்ளடக்கத்தைக் கொண்ட இப்படத்தில், ‘பல உண்மைக் கதைகளால் உந்தப்பட்டு எடுக்கப்பட்ட படம்’ என்ற வாசகமும் இருக்கிறது. இது மேலும் அனலைக் கூட்டியுள்ளது. குறிப்பாக, இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. “சங் பரிவார் தொழிற்சாலையின் மிகப்பெரிய பொய் 'THE கேரளா ஸ்டோரி' திரைப்படம்” என கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும், “படத்தில் கூறப்பட்டிருப்பது உண்மை என்றால், கேரளாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்களின் அடையாளத்தை ஆதாரத்துடன் மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கிறோம்” என்றும் அறிவித்துள்ளது.

இதற்கிடையே 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு தொடரப்பட்டது. ஆனால் அதை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இவ்விவகாரத்தில் தலையிட்டு, “இதுபோன்று எதுவும் கேரளாவில் நடக்கவில்லை. மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் வெறுப்பு பிரிவினைவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளனர்” என்று கூறி சங் பரிவாரை கடுமையாக விமர்சித்தார்.

The Kerala Story
The Kerala Story

இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை வெளியிட தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளித்திருப்பதால் இந்த படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இப்படி சர்ச்சைகள் தொடர்ந்து வரும் சூழலில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவது குறித்து தமிழக உளவுத்துறை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம் File Image

அதன்படி “இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், தமிழகத்தில் வெளியிட்டால் குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்து எதிர்ப்புகள் உருவாகும். எனவே, தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை அனுமதிக்க வேண்டாம்” என தமிழக அரசுக்கு மாநில உளவுத்துறை பரிந்துரை செய்துள்ளது. இதனால் இவ்விவகாரம் தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com