தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அரங்கேறிய காவல் மரணங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதிக் கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் காவல் மரணங்களால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை, தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்தார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில்,18 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் விஜய் வழங்கினார்.
தொடர்ந்து அவர்கள் மத்தியில் பேசிய விஜய், அவர்களுக்கு நியாயமும், தீர்ப்பும் பெற்றுத் தர வேண்டியது தனது கடமை என்றும், மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து, சட்டப்போராட்டம் நடத்தி நீதி பெற்றுத்தர தவெக முயற்சிக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தநிலையில், காவல் நிலைய மரணங்களை கண்டித்து சென்னையில் தவெக இன்று நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. மயிலாப்பூர் சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தின்போது, பைக் பேரணி, ஊர்வலம் நடத்தக்கூடாது என்றும், பட்டாசு வெடிக்கக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தவெகவினர் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ள நிலையில், பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட உள்ளனர்.