என்னோட குடும்பத்த நீங்கதான் பார்த்துக்கணும்.. நண்பர்களுக்கு ஆடியோ அனுப்பிவிட்டு உயிரைவிட்ட இளைஞர்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆல்னைன் டெலிவரி நிறுவன கிளை மேலாளர், தனது அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ராகுல்
உயிரிழந்த ராகுல்புதிய தலைமுறை

செய்தியாளர் - ரவி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் ராகுல் (27). பட்டதாரியான ராகுல், கூட்ரோடு பகுதியில் உள்ள அமேசான் ஸ்மார்ட் பே (Amazon Smart Pay) கிளை நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல அலுவலகத்திற்கு சென்ற ராகுல், தனது நண்பர்களுக்கு ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ”எனது இறப்பிற்கு Amazon Smart Pay உரிமையாளர் சிவா என்பவரும், நாமக்கல்லைச் சேர்ந்த ஸ்மாட் பே ஓனர் சதீஷ் உள்ளிட்ட மூன்று பேர் காரணம், என்னால் வேலை செய்ய முடியவில்லை. அலுவலகத்தில் மனரீதியான துன்புறுத்தல், கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என வற்புறுத்துகிறார்கள். எனது குடும்பத்தை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று வாட்ஸ் அப்பில் ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து, தனது அலுவலக வளாகத்தில் தூக்கிட்ட அவர், அடுத்த சில நிமிடங்களில் உயிர் இழந்தார். அவர் உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, நண்பன் அனுப்பிய அதிர்ச்சியூட்டும் ஆடியோ மெசேஜைக் கேட்ட அவரது நண்பர்கள், அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது, ராகுல் தூக்கில் தொங்கியிருந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள், ராகுல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார், ராகுல் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com