ஆகஸ்ட் 26 இல் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி.. ஏன் தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆகஸ்ட்26 ஆம் தேதி, மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை புரிகிறார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமரின் பயணம் அடுத்தடுத்து, தமிழ்நாட்டை நோக்கி திட்டமிடப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிறன்று, கங்கை கொண்டசோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்ற மோடி, வரும், ஆகஸ்ட் 26 ஆம் தேதி, மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளதாக, பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறை, சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளதாகவும், குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து நேரலையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப் பயணத்தின்போது, பாஜக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, செப்டம்பர் மாதஇறுதியிலும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை புரிய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூலை 26 ஆம் தேதி தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.4800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான முனையத்தை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு செய்த பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு திருச்சி சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து ஜூலை 27 நண்பகல் 12 மணிக்கு கங்கைகொண்ட சோழபுரம் சென்றார்.
அங்கு, மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் வழிபாடு நடத்தினார். தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.