”புதிய தலைமுறை இருட்டடிப்பு; அரசாங்கத்தின் அதிகாரத் திமிர்” - தராசு ஷ்யாம்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், நேற்றைய தினம் இருட்டடிப்பை எதிர்கொண்டது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி. இந்நிலையில், நேற்று மதியம் முதலாக ‘புதிய தலைமுறை’ தெரியவில்லை என்று நேயர்கள் பலரும் பேசலானார்கள். என்ன காரணத்தால், ‘புதிய தலைமுறை’ தெரியவில்லை என்று அரசு தரப்பை நாம் அணுகி கேட்டபோது முறையான பதிலைப் பெற முடியவில்லை.
ஆயினும், புதிய தலைமுறைக்கு இது புதிய அனுபவம் இல்லை. தமிழ்நாட்டில் மக்கள் குரலை உரக்கப் பேசும் ஊடகமான ‘புதிய தலைமுறை’ வெவ்வேறு ஆட்சிகளிலும் இத்தகைய தாக்குதலை எதிர்கொண்டுவருவதை ‘புதிய தலைமுறை’ பார்வையாளர்கள் நன்கறிவார்கள். யார் நல்லது செய்தாலும் அல்லது செய்தாலும் உள்ளது உள்ளபடி உண்மையை உரக்கப் பேசும் புதிய தலைமுறையின் துணிச்சலான நடுநிலை அணுகுமுறையே தமிழ் மக்கள் அதை இவ்வளவு மதிக்க முக்கிய காரணம். அதே துணிச்சலான நடுநிலை அணுகுமுறையே ஆட்சியாளர்கள் ‘புதிய தலைமுறை’ மீது அடக்குமுறையை ஏவவும் முக்கிய காரணம்.
அரசுத் தரப்பிடமிருந்து உரிய பதிலைப் பெற்ற பின் இந்த விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று காத்திருந்தது புதிய தலைமுறை. இதனூடாக புதிய தலைமுறை தெரியவில்லை எனும் செய்தியை அறிந்த பலரும் சமூக வலைதளங்களில் கொதித்து எழுந்தனர்.
பொதுவாக, முதல்வர்கள் டெல்லி செல்லும்போது, செய்தியாளர்களைச் சந்திப்பது மரபு. முதல்வர் விஜய், பதவியேற்ற நாளிலிருந்தே ஊடகங்களிடம் பேசவில்லை என்பதோடு, டெல்லியிலும் பத்திரிகையாளர்களைச் சந்திக்காதது விமர்சனமானது. இந்தப் பின்னணியில் பெருஞ்செய்தி பகுதியில் இதை வெளியிட்டது புதிய தலைமுறை.
இதன் தொடர்ச்சியாகத்தான் புதிய தலைமுறை இருட்டடிக்கப்பட்டதோ எனும் கேள்வி எழுந்த சூழலில், “உண்மையைப் பேசும் மக்கள் ஊடகமான புதிய தலைமுறையை இருட்டடிப்பு செய்வதா? ஊடக சுதந்திரத்தின் மீது அடக்குமுறையை ஏவி ஜனநாயகத்தைத் தாக்குவதா?” என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்பட பலரும் சமூகவலைதளங்களில் கடும் எதிர்வினை ஆற்றினர். விளைவாக, நேற்று இரவு முதலாக மெல்ல பழையபடி மீண்டது புதிய தலைமுறை ஒளிபரப்பு. அரசு கேபிள் சேவையில் இப்போது மீண்டும் தெரிகிறது புதிய தலைமுறை.
இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம், ”அரசுக் கேபிளில் இருட்டடிப்பு செய்வது என்பது எந்த அரசு செய்தாலும் அது திமிர்தான். எந்த ஊடகத்தின் மீது இவ்வாறான தாக்குதல் நடத்தினாலும், அது ஊடக சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தான்.
”காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீ தான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில்
பாய்ந்திடும் எழுச்சி நீ தான்!
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்
பிறந்த பத்திரிகைப் பெண்ணே”
இது பாரதிதாசன் பத்திரிக்கையாளர்களுக்கு வகுத்த இலக்கணம்.
ஊடகங்கள் அவரவர் கடமையை செய்கிறார்கள். தமிழ்நாடு அரசு அரசு கேபிள் நிறுவனம் 2007-ல் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. இதற்கு, ட்ராய் (TRAI) உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு அமைப்புகள் இருக்கின்றன. எனவே, தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருப்பது தவறு. தொழில்நுட்பக் காரணங்களால் அது நடந்திருந்தால், அது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது நேற்றிலிருந்தே சமூக வலைதளங்களில் அலசப்பட்டு வருகிறது. இன்று மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியிருக்கிறது. இதை நாம், ஆளுங்கட்சி எதிராக பேசியதால், நடத்தப்பட்ட தாக்குதல் என புரிந்துகொள்ள முடிகிறது.
முதல்வர் விஜய் டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திக்கவில்லை என்பதை தேசிய ஊடகங்கள் தற்போது பேசி வருகின்றனர். நாமும் அதை வைத்திருக்கிறோம். பத்திரிக்கையாளர்களை டெல்லி செல்லும் முதல்வர்கள் சந்திப்பது மரபு. ஏனென்றால், தமிழ்நாடு அரசின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் அகில இந்திய அளவில் சொல்வதற்கான வாய்ப்பு. உதாரணமாக, வந்தே மாதரம் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின் பாடப்பட வேண்டும் என்பதை விளக்கவேண்டும். இந்தமாதிரியான செய்தியாளர் சந்திப்புகளை, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். உட்பட பலரும் நடத்தியிருக்கிறார்கள். விஜய் மௌனியாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை ஊடகமாக கேட்க வேண்டும். அதைக் கேட்டால்தான் ஊடகமும் கூட. அதற்காக, இருட்டடிப்பு என்பது மிகப்பெரிய தவறு. இதற்கு பொறுப்பான துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடக்காத வகையில் இந்த அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

