பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம்..!
பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, அது தொடர்பான வீடியோவை வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் 2019 பிப்ரவரி 12 ஆம் நாளன்று புகார் அளித்தார்.
இந்நிலையில், வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில், வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது . இவ்வழக்கை நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வந்தார்.
பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், 3 முறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டநிலையில், சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், அருளானந்தம், ஹரோன், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் கடந்த 13.05.2025 அன்று கோயம்புத்தார் மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடந்த 13.05.2025 அன்று கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பொள்ளாச்சி பாலியல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக உத்தரவிடப்பட்டுள்ளது. வன்கொடுமை சம்பவத்தில் ரூ.85 லட்சம் வழங்க இந்தவழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் நீதிமன்ற விசாரணைக் குழு ஒத்துழைப்பும் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. அத்தகைய நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது. அந்த வகையில், நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகிய ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.