பொள்ளாச்சி பாலியல் வழக்கு... தண்டனை விவரம் வெளியீடு!
பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, அது தொடர்பான வீடியோவை வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் 2019 பிப்ரவரி 12 ஆம் நாளன்று புகார் அளித்தார்.
இந்நிலையில், வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில், வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது . இவ்வழக்கை நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வந்தார்.
பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், 3 முறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டநிலையில், சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், அருளானந்தம், ஹரோன், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை வெளியானது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்ற தீர்ப்பு அளிக்கப்பட்டநிலையில், மதியம் 12 மணியளவில் தண்டனை விபரம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.
அரசு தரப்பு வழக்கறிஞர்!
இந்நிலையில், தற்போது தண்டனை விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு வழக்கறிஞர் சுந்தரமோகன், “9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்புத்துள்ளது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவு. பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு .கூடுதலாக, இவ்வழக்கில் ஒரு சாட்சிக்கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞரின் கருத்து
முன்னதாக, குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாண்டியராஜன், “இந்த வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். தீர்ப்புக்கு முன் எங்கள் தரப்பில் கருத்து கேட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீதும் வேறு எந்த வழக்குகளும் இல்லை. இவர்கள் அனைவரும் இளைய வயதினர். இவர்களின் வயது, உடல்நிலை மற்றும் இவர்களின் வயதான பெற்றோரைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்று கோரியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.