“ஆதவ் அர்ஜுனா அரசியல் செயல்பாடுகளை எங்கள் குடும்பத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டாம்” மனைவி அறிக்கை!
“ஆதவ் அர்ஜுனா எடுக்கும் அரசியல் முடிவுகள், அவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது; அவருடைய அரசியல் செயல்பாடுகளை எங்கள் குடும்பத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டாம்” ஆதவ் அர்ஜுனாவின் மனைவியும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகளுமான டெய்சி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் சாராம்சம்தான் இது.
பல்வேறு கட்சிகளுக்கு ஆதரவும், நன்கொடையும் அளித்து வரும் மார்ட்டின், பாஜக, திமுக இரண்டுக்கும் நிதி அளிப்பவர்களில் முக்கியமானவராகத் திகழ்கிறார். தனக்குச் சொந்தமான மார்ட்டின் குழும நிறுவனங்கள் மூலமாக, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024ஆம் ஆண்டு ஃபிப்ரவரி வரை ஆயிரத்து 368 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் வாங்கியிருக்கிறார். அதில், 37 சதவிகிதம், அதாவது 509 கோடி ரூபாய் திமுக-வுக்கு சென்றிருக்கிறது. இதன் மூலம் தீவிர திமுக விசுவாசியாக அறியப்படுகிறார் சாண்டியாகோ மார்ட்டின். இதேபோல பாஜக-விற்கு 100 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்.
மார்டினைப் பற்றி அறிந்தவர்கள், அவர் கைதேர்ந்த தொழிலதிபர்; எல்லா கட்சிகளிலுமே தன் தொழில்நலன்களுக்கு ஏற்ப செல்வாக்கை வளர்த்துக்கொண்டிருப்பவர் என்று சொல்கிறார்கள். இத்தகைய சூழலில், ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாடுகள் மாமனார் மாப்பிள்ளை இடையே முரண்பாட்டை உண்டாக்கியதாகக் கூறப்படுகிறது. இதை ஆதவ் அர்ஜுனாவே புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்த முரண்பாடு விஜய் கட்சியில் ஆதரவ் அர்ஜுனா சேர்ந்தபின் அதிகரிப்பதாக செய்திகள் அடிபட்டன. அதையே ஆதவ்வின் காதல் மனைவி டெய்சியின் அறிக்கை உறுதிபடுத்துவது போல் அமைந்திருக்கிறது.
“ஆதவ் அர்ஜுனாவும் நானும், எங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழிலையும் தனித்தனியாகப் பார்க்கவே விரும்புகிறோம்” என்ற வரிகளுடன் தொடங்கும் அந்த அறிக்கை, “எங்கள் குடும்பத்தில் சிக்கலை உண்டாக்காதீர்கள்” எனும் வரிகளோடு முடிகிறது.