என். ஆனந்தின் மைக்கை பறித்த காவல் அதிகாரி.. வைரலாகும் வீடியோ.!
புதுச்சேரியில் நடைபெற்ற விஜய் மக்கள் சந்திப்பில், பாஸ் இல்லாமல் உள்ளே வர முயன்றவர்களை அனுமதிக்க மறுத்த காவல்துறை அதிகாரி, என். ஆனந்தின் மைக்கை பறித்த வீடியோ வைரலாகியுள்ளது.
புதுச்சேரி உப்பளம் தொகுதி அம்பேத்கர் சாலையில் உள்ள துறைமுக மைதானத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குறிப்பாக, 5 ஆயிரம் பாஸ்கள் கொடுக்கப்பட்டு, QR கோட் ஸ்கேன் செய்பவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, பாஸ் உள்ளவர்கள் மட்டும் இன்று காலை உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வருவதற்கு சில மணி நேரங்கள் இருந்த நிலையில் மக்கள் கூட்டம் அதிகளவில் கூடாமல் இருந்தது. இதனால் மைதானத்திற்கு வெளியே விஜயை பார்க்க வந்தவர்களை பாஸ் இல்லாமல் உள்ளே வர சொல்லி அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் இஷா சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த பெண் காவல் அதிகாரி, உங்களால் ஏற்கனவே 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். யாரேனும் உயிர் இழந்தால் நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம் என தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை எச்சரித்தார்.
மேலும், என்.ஆனந்த் மைக் மூலமாக அனைவரையும் உள்ளே அழைத்த நிலையில் அந்த மைக்கை ஆனந்த் கையில் இருந்து பறித்த ஈஷா சிங் உள்ளே வரும் மக்கள் பாஸ் உடன் வர வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது, செய்வதறியாமல் என். ஆனந்த் நின்றார். இதனைக் கண்ட சட்டம் ஒழுங்கு முதுநிலை கண்காணிப்பாளர் கலைவாணன் பிரச்சனை பெரிதாகாமல் இருக்க அங்கு சமாதானம் செய்தார். இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்திடம் மைக்கை பிடுங்கி எச்சரித்த பெண் காவலரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

