கர்ப்பிணியை தாக்கிய காவல் ஆய்வாளர் சிறையிலடைப்பு
திருவெறும்பூர் பெல் ரவுண்டனா பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை தாக்கிய காவல் ஆய்வாளர்
சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகேயுள்ள சூளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், தனியார் நிதி நிறுவன ஊழியர் ராஜா. 3 மாத கர்ப்பிணியான தனது மனைவி உஷாவுடன் திருச்சியில் உள்ள நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார் ராஜா. அப்போது, துவாக்குடியில் உள்ள சுங்கசாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை மறித்துள்ளனர். அவர்கள் நிற்காமல் கடந்துசென்றபோது போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்றதாக தெரிகிறது. சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர் காமராஜ் திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டனா அருகே தம்பதியினர் சென்ற இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தார். இதில் நிலைதடுமாறி உஷா மற்றும் அவரது கணவர் ராஜா ஆகியோர் இருசக்கர வாகனத்துடன் கிழே விழுந்தனர். அப்போது தலையில் பலத்த காயமடைந்த உஷா நிகழ்விடத்திலேயே, கணவர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பத்தை நேரில் பார்த்த பொது மக்கள் ஆய்வாளரை துரத்தி பிடிக்க முற்பட்டபோது அவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதற்கிடையில் கர்ப்பிணி உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த காவல் ஆய்வாளரை கைது செய்யக் கோரி 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திருச்சி -தஞ்சாவூர் தேசிய நெடுசாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்ததில் பலர் காயமடைந்தனர். உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆய்வாளர் காமராஜை தூவாக்குடி காவலர்கள் கைது செய்தனர். அவர் மீது 304/2 (தனிமனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல்), 333 (கொலை செய்யும் நோக்கில் தாக்குவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட்ட காமராஜை வரும் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். திருச்சி மத்திய சிறையில் ஆய்வாளர் காமராஜ் அடைக்கப்பட்டுள்ளார்.