போயஸ் கார்டனில் இன்று நடைபெற்ற சம்பவம் நாடகம் போல் இருப்பதாக, கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி தெரிவித்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்திற்கு அவரது அண்ணன் மகள் தீபா இன்று காலை சென்றார். அப்போது, தீபாவை அங்கிருந்த பாதுகாவலர்களும் தினகரன் ஆதரவாளர்களும் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தீபாவின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற பத்திரிகையாளர்களும் அப்போது தாக்கப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, சசிகலா குடும்பத்துடன் சேர்ந்து சகோதரர் தீபக்தான் தம்மை வரவழைத்ததாகத் தெரிவித்தார். போயஸ் கார்டனுக்கு திட்டமிட்டு வரவழைத்து தன்னை கொல்ல சதி நடந்ததாகவும் குற்றம்சாட்டினார். ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினருடன் சேர்ந்து சகோதரர் தீபக் கொன்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய தினகரன் ஆதரவாளரான கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி, போயஸ் கார்டனில் இன்று நடந்த சம்பவம் நாடகம்போல் இருப்பதாக விமர்சித்துள்ளார். ஜெயலலிதா நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட புகழேந்தி, இந்த உண்மை தெரிந்தும் அவரை கொன்றுவிட்டதாக தீபா கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். போயஸ் கார்டனுக்கு தீபா வருவதை யாரும் தடுக்கவில்லை என்றும் தினகரன் ஆதரவாளர்களும் யாரும் அவரை தாக்கவில்லை எனவும் புகழேந்தி விளக்கமளித்துள்ளார்.