சாதிவாரி கணக்கெடுப்பு | ”முதல்வர் ஸ்டாலின் தூங்குவது போல நடித்து வருகிறார்” - அன்புமணி ராமதாஸ்.!
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழகம் முழுதும் பலகட்ட போராட்டங்களையும் நடத்திவருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை எழும்பூரில் இன்று போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்க தவெக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தப் போராட்டத்தில் பாஜக சார்பில் கரு. நாகராஜன், புரட்சி பாரதம் கட்சி எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி, கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கின்றனர். ஆனால், தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
மேலும், இந்தப்போராட்டத்தில் ”சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; சமூக நீதியை காப்பாற்ற சாதி வாரிக் கணக்கெடுப்பு அவசியம்” உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து அக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாடு சமூக நீதியின் பிறப்பிடம். ஆனால், திமுக ஆட்சியில் சமூக நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாமக 36 ஆண்டுகளாக கேட்டுக்கொண்டு வருகிறது. ஆனால், திமுக அரசோ சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசால்தான் நடத்த முடியும் என்ற பொய்யயை மீண்டும் மீண்டும் பொய்களை கூறி வருகிறது. இப்போது இருக்கக்கூடிய சாதிவாரி கணக்கு என்பது 1931-ல் எடுக்கப்பட்ட கணக்கு. இதை வைத்துதான் தற்போது வரை இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல உரிமைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதனால்தான் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.
இரண்டு மாதங்களுக்கு முன் கர்நாடக நீதிமன்றம், மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தலாம் என தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், இதற்கு பிறகும் முதல்வர் ஸ்டாலின் பொய் கூறி வருகிறார். தூங்குபவர்களை எழுப்பலாம்., தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது. முதல்வர் ஸ்டாலின் தூங்குவது போல நடித்து வருகிறார்.
பிகார் தேர்தலில் நிதிஷ் குமார் வெற்றியடைந்ததற்கு காரணம் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி எல்லாருக்குமான சமூக மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இதன்மூலம், சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது இடஒதுக்கீடு நடைமுறைபடுத்தப் படுவதற்கானது மட்டுமல்ல என்பதும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டிற்கு தற்போது ஆபத்து வந்துள்ளது. அதைக் காப்பாற்ற வேண்டும் என்றால் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது முக்கியம்” எனப் பேசியுள்ளார்.
முன்னதாக, பாமக இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 12 ஆம் தேதி ராமதாஸ் தரப்பு பாமக சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி போராட்டம் நடத்தியிருந்தது. இந்த நிலையில், இன்று அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

