”என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள் ” - அன்புமணி குறித்து ராமதாஸ்!
மகன் அன்புமணியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு மோதல்போக்கு நிலவும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், “ எனக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான பிரச்சினை யாருக்கும் முழுமையாக தெரியாது. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னை டிராவில்தான் முடிந்துள்ளது. 34 அமைப்புகளில் இருந்த 4 பஞ்சாயத்துக்காரர்கள் ஒரே மாதிரியான தீர்ப்பை கூறினார்கள். அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயாராக இருந்தேன்.
ஆனால், இப்போது நீயா, நானா என்பதை பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பாமகவை நிறுவிய நான் தலைவராக இருக்கக்கூடாதா? . தலைமை ஏற்க எனக்கு உரிமையில்லையா என்பதை கேட்கவே எனக்கு அவமானமாக இருக்கிறது. பாமக என்னும் மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார். சற்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் கிடைத்திருக்கும்.
அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை நீக்கப்போவதாக நிர்வாகிகளிடம் அன்புமணி பொய் கூறியுள்ளார். அன்புமணி என்னை மானபங்கம் செய்துவிட்டார். என்னை வெளியே தள்ளவும் முயற்சிக்கிறார். 50 தொகுதி வலுவாக இருந்தால்தான் கூட்டணி பேச முடியும். கட்சியை அன்புமணி ஒழுங்காக நடத்தவில்லை. அன்புமணி உடனான பேச்சுவார்த்தை தோல்வி என்றுதான் நினைக்கிறேன். அன்புமணி உடனான மோதலில் யாரும் பின்புலம் இல்லை. யார் என்ன சொன்னாலும் அன்புமணி கேட்கமாட்டார்.
நமது குடும்ப பெண்களுக்கு அரசியல் வேண்டாம் என்பதை மீறி சவுமியா போட்டியிட செய்தார். தைலாபுரம் இல்லத்துக்குள் பேரன், பேத்திகளுடன் இருக்க சொல்கிறார்கள். தேர்தலுக்கு பிறகு அனைத்தும் அன்புமணியிடம் சென்றுவிடும். அன்புமணி ஒருபோதும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க மாட்டேன். இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினரும் என் பக்கம்தான் உள்ளனர். அனைத்து சாதியினரும் முன்னேற பாடுபட்டு வருகிறேன். பாமக உடன் கூட்டணி வைக்க விரும்புவோருக்கு நல்லது கெட்டது தெரியும். தேர்தல் கூட்டணி குறித்து யாரிடம் பேச வேண்டும் என்பதை கூட்டணி கட்சிகளே முடிவு செய்யட்டும்.
தவெகவுடன் இதுவரை பேச்சுவார்த்தை இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து நான் தான் முடிவு செய்தேன். கோலூன்றி நடக்கும்நிலை வந்தாலும் தமிழக மக்களுக்காக பாடுபடுவேன். அனைத்து கட்சிகளும் நான் எடுத்த முடிவை சரி என கூறுகின்றனர். என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களை நான் நேசிக்கிறேன். ஆடிட்டர் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் தனிப்பட்ட முறையில் பிரச்னையை தீர்க்க முயன்றனர். பாஜகவில் இருந்து யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அன்புமணியை கட்சியை விட்டு வெளியேற்ற நான் என்ன முட்டாளா? .ஐயாவுக்குப் பிறகே அன்புமணி; இப்போது எல்லோரும் சொல்கின்ற வார்த்தை.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தந்தைக்கு பிறகே தனயன். அய்யாவுக்கு பின்னே அன்புமணி. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம், ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே நீதி நேர்மை தர்மம் ஆகும். என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள். எங்களுக்கு எல்லாமே அய்யாதான் என சொல்லிக்கொண்டே என்னை பாதாளத்தில் தள்ளப்பார்க்கிறார்கள். என் கை விரல் கொண்டே என் கண்ணை குத்திக்கொண்டேன். வரும் 2026 தேர்தல் வரை நானே பாமக தலைவராக நீடிப்பேன்"என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.