வெளியூர் சென்ற ராமதாஸ்.. தைலாபுரம் வந்த அன்புமணி.. என்ன காரணம்?
தந்தை ராமதாஸ் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து நேற்று தைலாபுரம் சென்று தாய் சரஸ்வதியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ். மகன் அன்புமணி தன் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று ராமதாஸ் காட்டமாக தெரிவித்திருந்த நிலையில், அன்புமணியின் இந்த சந்திப்பு கவனம் ஈர்த்திருக்கிறது.
பாமகவில் தந்தை மகனுக்கு இடையேயான மோதல் கட்சியினரை விழி பிதுங்கச் செய்துள்ளது. அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், ராமதாஸை குழந்தை போல மாறிவிட்டார் என்று அன்புமணி விமர்சிப்பதும் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் நிர்வாகிகள் சிலரை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டால், அவர்கள் தொடர்வார்கள் என்று அறிவிப்பு விடுகிறார் அன்புமணி. இதனிடையே, தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தனது லெட்டர் பேரில் இருந்தும் அவரது பெயரை நீக்கி இருந்தார்.
இதன் அடுத்தகட்டமாக, கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமதாஸ், தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.. அன்புமணி அவரது பெயருக்குப் பின்னால் தன் பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும், இனிஷியலை வேண்டுமென்றால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பேசினார். இப்படியாக, தந்தை மகனுக்கும் இடையே மோதல் முற்றி இருக்கிறது.
இந்த நிலையில்தான், தனது தந்தை ராமதாஸ் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து தைலாபுரம் சென்ற அன்புமணி, தாய் சரஸ்வதியை சந்தித்து பேசியுள்ளார். தந்தை மகனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தைலாபுரம் இல்லத்திற்கு வருகை தந்தார் அன்புமணி. அப்போது, அய்யா தன் பெயரை நான் பயன்படுத்தக்கூடாது என்கிறாரே.. பிறகு நீங்கள் எதற்கு இங்கு இருக்க வேண்டும். என்னுடன் சென்னை வந்துவிடுங்கள் என்று அன்புமணி தனது தாயிடம் முறையிட்டதாக தைலாபுரம் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. அதற்கு தாய் மறுத்திவிட்ட நிலையில், தாயின் கையால் உணவு சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் அன்புமணி.
தந்தை அன்புமணியிடம் இருந்து ஏதேனும் சாதித்துக்கொள்ள வேண்டுமானால், அம்மா வழியாகவே அதை செய்துகொள்ளும் அன்புமணி, இப்போதும் சந்தித்து பேசி இருக்கிறார். குறிப்பாக, சில தினங்களுக்கு முன்பு தாய் - தந்தையர் இருவரும் திருமண நாளை கொண்டாடியபோது, ஒட்டுமொத்த குடும்பமே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில், அன்புமணி புறக்கணித்திருந்தார். இந்த சூழலில், கட்சி நிகழ்ச்சிக்காக ராமதாஸ் கும்பகோணம் சென்ற நிலையில், அன்புமணி தனது அம்மாவை சந்தித்து பேசி இருப்பது கவனம் ஈர்த்துள்ளது.