பாமகவில் உச்சகட்டத்தை எட்டிய மோதல் போக்கு.. என்னதான் நடக்கிறது?
கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு வியாழக்கிழமையும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்புக்கு உத்தரவாதம் அளிப்பவர், பாமக நிறுவனர் ராமதாஸ். தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் அவர், சரவெடிக்கு திரி கொளுத்துவார். இந்த முறை, மகன் அன்புமணியை, பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார் ராமதாஸ். கட்சியின் களை நீக்கப்பட்டு விட்டதாக அவர் உதாரணப்படுத்தினார்.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி புதுச்சேரியில் ராமதாஸ் தலைமையில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை ஒழுங்கு நடவடிக்கை குழு சுமத்தியது. இதுபற்றி விளக்கமளிக்குமாறு முதலில் ஆகஸ்ட் 31 வரையும், பின்னர் செப்டம்பர் 10 வரையும் அவகாசம் அளித்து, அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தன. 2 நோட்டீஸ்களுக்கும் எந்த பதிலும் இல்லாததால், அவரை கட்சியில் இருந்து நீக்கி, கட்சியின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த களையை நீக்கிவிட்டதாக, நீக்கத்துக்கான காரணத்தைக் கூறினார். அன்புமணி வேண்டுமானால், தனிக்கட்சி தொடங்கட்டும் என்று கூறிய ராமதாஸ், அவர் தனிக்கட்சி தொடங்கினாலும் அது வளராது என்று, கிட்டத்தட்ட சாபமிட்டார். ஓர் அரசியல் தலைவராக செயல்பட தகுதியற்றவர் என்றும், தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார் என்றும், குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார் பெரியவர்.
பாமக, நான் தொடங்கிய கட்சி; எனக்கே எல்லா அதிகாரமும் உள்ளது என்று பறைசாற்றிய ராமதாஸ், அன்புமணி, இனி, இனிஷியலைத் தவிர, தனது பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் ஆவேசம் காட்டினார். அன்புமணி பேசுவதெல்லாம் பொய் என்றும், ஒட்டுக்கேட்கும் கருவி மூலம் என்னையே உளவு பார்த்தார் என்றும், ஆதங்கப்பட்டார். அன்புமணி மட்டுமல்ல, அவருடன் இருப்பவர்கள் குறித்தும் பேசினார் ராமதாஸ். அன்புமணியுடன் இருப்பவர்கள் தனிக்கட்சியாக செயல்படுவதுபோல் இருப்பதாக சுட்டிக்காட்டி வேதனையை வெளிப்படுத்திய நிறுவனர், அவர்கள்மீது வருத்தம் இருந்தாலும் மன்னிக்கத்தயார் என்று முன்வந்தார்.
இது தந்தை - மகன் பிரச்சினை அல்ல; கட்சியின் பிரச்சினை, மக்களின் பிரச்சினை என்று, பாமகவில் நிலவும் குழப்பம் குறித்து விளக்கமளித்துள்ளார் ராமதாஸ். உயிருள்ளவரை, கோல் ஊன்றியாவது மக்களுக்காக போராடுவேன் என்றும் சூளுரைத்தார் பாமக நிறுவனர்.